சினிமா

திருமாவளவனுடன் போனில் பேசி நெகிழ்ந்த ரஜினி: அரைமணி நேரம் ஆலோசனை

Published On 2017-06-21 15:11 IST   |   Update On 2017-06-21 15:11:00 IST
அரசியலுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ள திருமாவளவனுடன் ரஜினிகாந்த் போனில் பேசியுள்ளார். சுமார் அரைமணி நேரமாக ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
ஜெயலலிதா மரணம் அடைந்ததால் தமிழக அரசியலில் மிகப்பெரிய வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அந்த வெற்றிடத்தை குறிவைத்து ரஜினி அரசியலுக்கு வரலாம் என்று கூறப்படுகிறது.

அரசியலுக்கு வருவது பற்றி ரஜினி சில முக்கிய பிரமுகர்களை சந்தித்து ரகசிய ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.

ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்று தமிழருவி மணியன் அவரை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார். தென்னக நதிகள் இணைப்பு குழு தலைவர் அய்யாக்கண்ணு ரஜினியை சந்தித்தபோது விவசாயிகளுக்கு எப்போதும் ஆதரவாக இருப்பதாக உறுதி அளித்தார்.

இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன்சம்பத் நேற்று முன்தினம் ரஜினியை சந்தித்து அரசியலுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.



ரஜினி புன்முறுவலுடன் சிரித்தபடி அதை ஏற்றுக் கொண்டதாக தெரிகிறது. ரஜினியை சந்தித்து விட்டு வெளியே வந்த அர்ஜுன் சம்பத் நிருபர்களிடம் கூறுகையில், “ரஜினி நிச்சயம் அரசியலுக்கு வருவார். அவர் தனிக்கட்சி தொடங்குவார்” என்று பேட்டி அளித்தார்.

ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்று பலர் அவரை நேரில் சந்தித்து வலியுறுத்தி வரும் நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், ரஜினி அரசியலுக்கு வர வேண்டும், தனிக்கட்சி தொடங்க வேண்டும் என்று பகிரங்கமாக பேட்டி கொடுத்து அழைப்பு விடுத்தார்.

ரஜினிகாந்த் சினிமா கதாநாயகர் என்பதால் அவருக்கு செல்வாக்கு உள்ளது. அதை பயன்படுத்தி அவர் ஜெயலலிதாவின் வெற்றிடத்தை நிரப்பக்கூடும். அவர் 45 ஆண்டுகளாக சினிமா மூலம் ஆளுமை செலுத்தி வருகிறார். அவர் இந்த தேசத்து குடிமகன். அவருக்கு அரசியலில் ஈடுபட உரிமை உள்ளது. அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்று கூறினார்.



இந்த பேட்டியை படித்ததும் ரஜினி, திருமாவளவனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். சுமார் அரைமணி நேரத்துக்கும் மேலாக அவர் பேசி உள்ளார்.

இதுவரை எல்லோரும் என்னிடம் தனிப்பட்ட முறையில் பேசியபோது மட்டுமே என்னை அரசியலுக்கு வருமாறு அழைத்தனர். ஆனால் நீங்கள் மட்டும்தான் நான் அரசியலுக்கு வர வேண்டும், தனிக்கட்சி தொடங்க வேண்டும் என்று வெளிப்படையாக கூறி உள்ளீர்கள் என்று கூறி நெகிழ்ந்ததாக கூறப்படுகிறது.

தன் குடும்பத்தினரும் அந்த பேட்டியை படித்துவிட்டு பாராட்டினர் என்று ரஜினி திருமாவளவனிடம் கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Similar News