சினிமா செய்திகள்

சிறுவனிடம் ஏமாந்த நடிகை நிவேதா பெத்துராஜ்

Published On 2024-11-04 07:03 IST   |   Update On 2024-11-04 07:03:00 IST
  • சென்னை அடையாறு சிக்னலில் 8 வயது சிறுவனால் ஏமாற்றப்பட்டேன்.
  • முதலில் அந்த சிறுவன் என்னிடம் பணம் கேட்டான்.

சென்னை:

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நிவேதா பெத்துராஜ். இவர் 'ஒருநாள் கூத்து', 'பொதுவாக எம்மனசு தங்கம்', 'டிக்...டிக்...டிக்' உட்பட பல்வேறு தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது சென்னையில் வசித்து வருகிறார். இந்த நிலையில், நடிகை நிவேதா பெத்துராஜியிடம் சிறுவன் ஒருவன் பணப்பறிப்பில் ஈடுபட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.

இதுதொடர்பாக நடிகை நிவேதா பெத்துராஜ் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

"சென்னை அடையாறு சிக்னலில் 8 வயது சிறுவனால் ஏமாற்றப்பட்டேன். முதலில் அந்த சிறுவன் என்னிடம் பணம் கேட்டான். இலவசமாக பணம் கொடுக்க நான் மறுத்தேன். இதையடுத்து அவன் புத்தகத்தை ரூ.50-க்கு என்னிடம் விற்பனை செய்ய முயன்றான். நான் ரூ.100-ஐ எடுத்தேன். இந்த வேளையில் சிறுவன் என்னிடம் ரூ.500 தாங்கனு கேட்டான். அப்போது நான் புத்தகத்தை அவனிடம் கொடுத்து ரூ.100-ஐ மீண்டும் வாங்கினேன். இந்த வேளையில் புத்தகத்தை காருக்குள் வீசிய சிறுவன் என் கையில் இருந்த பணத்தை பறித்து கொண்டு ஓடிவிட்டான்" என கூறியுள்ளார்.

மேலும் அந்த பதிவில் நிவேதா பெத்துராஜ், "இப்படி ஆக்ரோஷமாக பிச்சை கேட்கும் பழக்கம் எல்லா இடத்திலும் இருப்பது உண்மையா? இந்த பிரச்சினையை நீங்கள் சந்தித்து உள்ளீர்களா?" எனவும் கேள்வி எழுப்பி உள்ளார். இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து அடையாறு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கதையாகி வரும் நிலையில், போக்குவரத்து சிக்னல்களில் பொருட்களை வாங்க கட்டாயப்படுத்தும் நபர்கள் மற்றும் பணம் பறிக்கும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News