சினிமா செய்திகள்

லால் சலாம்

புதுச்சேரியில் நடைபெறும் 'லால்சலாம்' படப்பிடிப்பு.. 2-வது நாளாக ரசிகர்கள் திரண்டதால் பரபரப்பு

Published On 2023-06-02 11:02 GMT   |   Update On 2023-06-02 11:02 GMT
  • இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘லால் சலாம்’.
  • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

லைகா தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் 'லால் சலாம்' திரைப்படம் உருவாகி வருகிறது. கிரிக்கெட்டை மையமாக வைத்து தயாரிக்கப்படும் இந்த திரைப்படத்தில் நடிகர்கள் விக்ராந்த், விஷ்ணு, விஷால் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும், இத்திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் கிரிகெட் வீரர் கபில்தேவ் ஆகியோர் நடிக்கின்றனர்.


லால் சலாம்

கடந்த சில நாட்களுக்கு முன்பு மும்பையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்தது. அப்போது நடிகர் ரஜினிகாந்த், கபில்தேவை சந்தித்து திரைப்படத்தின் கதைகளை பற்றி பேசினார். தொடர்ந்து இத்திரைபடத்தின் காட்சிகள் பல்வேறு இடங்களில் நடந்து வந்தது. தற்போது புதுவையில் 'லால் சலாம்' படப்பிடிப்பு நடந்து வருகிறது.

புதுவை-கடலூர் சாலையில் உள்ள பழைமையான ரோடியர் மில் வளாகத்தில் நேற்று காலை முதல் 'லால்சலாம்' படப்பிடிப்பு நடந்தது. மாலை 3 மணி அளவில் நடிகர் ரஜினிகாந்த் படப்பிடிப்பு நடைபெறும் ரோடியர் மில்லுக்கு வந்தார். அங்கு அவர் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டன. இது குறித்து தகவல் அறிந்ததும் ரஜினி ரசிகர்கள் ரோடியர் மில்லுக்கு திரண்டு வந்தனர். ஆனால் அவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட வில்லை. ரோடியர் மில்லில் மெயின் கேட் இழுத்து மூடப்பட்டது. இதனால் ரஜினியை பார்க்க முடியாமல் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.


லால் சலாம்

ஆனாலும் தொடர்ந்து ரசிகர்கள் ரஜினியை பார்த்து விட வேண்டும் என்ற ஆவலில் ரோடியர் மில் முன்பு காத்திருந்தனர். மாலை 6 மணியளவில் ரஜினிகாந்த் அங்கிருந்து காரில் தான் தங்கிருக்கும் தனியார் ஓட்டலுக்கு புறப்பட்டு சென்றார். இன்று காலை மீண்டும் ரஜினி நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டன. 2-வது நாளான இன்றும் காலை முதலே ரசிகர்கள் பட்டாளம் ரோடியர் மில்முன்பு திரண்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

தொடர்ந்து ரஜினி நடிக்கும் லால்சலாம் படப்பிடிப்பு கோரிமேடு, லாஸ்பேட்டை மைதானம் உள்பட பல்வேறு இடங்களில் 10 நாள் நடைபெறும் என்று படப்பிடிப்பு குழுவினர் தெரிவித்துள்ளனர். 

Tags:    

Similar News