சினிமா செய்திகள்

எப்படி மேல்முறையீடு வழக்கு தொடர முடியும்- மன்சூர் அலிகானுக்கு நீதிபதி கேள்வி

Published On 2024-01-31 07:30 GMT   |   Update On 2024-01-31 07:30 GMT
  • நஷ்டஈடு வழக்கு தொடர அனுமதி கேட்டு நடிகர் மன்சூர் அலிகான் சென்னை ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
  • மன்சூர் அலிகானுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து அவரது வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிடப்பட்டது.

நடிகை திரிஷா குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த விவகாரத்தில், தான் பேசிய முழு வீடியோவையும் பார்க்காமல் தனது நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாக குற்றம் சாட்டி, நடிகைகள் திரிஷா, குஷ்பூ, நடிகர் சிரஞ்சீவி ஆகியோருக்கு எதிராக தலா ஒரு கோடி ரூபாய் மான நஷ்டஈடு வழக்கு தொடர அனுமதி கேட்டு நடிகர் மன்சூர் அலிகான் சென்னை ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.


இந்த மனுவை விசாரித்த நீதிபதி, நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் நோக்கத்திலும், விளம்பர நோக்கிலும் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக கூறி, மன்சூர் அலிகானுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து அவரது வழக்கை தள்ளுபடி செய்து உத்தர விட்டிருந்தார். இந்த அபராதத் தொகையை இரண்டு வாரங்களில் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு செலுத்தி, அதுகுறித்து தெரிவிக்க வேண்டுமென உத்தரவிட்டிருந்தார். இந்த தொகையை செலுத்த கால நீட்டிப்பும் வழங்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மன்சூர் அலிகான் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது சபீக் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், அபராத தொகையை செலுத்துவதாக தனி நீதிபதி முன்பு ஒப்புக்கொண்டு, கால அவகாசமும் பெற்று விட்டு, தற்போது அதனை எதிர்த்து எப்படி மேல்முறையீடு வழக்கு தொடர முடியும் என்று கேள்வி எழுப்பி, தனி நீதிபதி உத்தரவிற்கு தடைவிதிக்க மறுத்தனர்.

அந்த உத்தரவை திரும்ப பெறக்கோரி தனி நீதிபதி முன் வலியுறுத்தலாம் அல்லது பணத்தை கட்ட முடியுமா? முடியாதா? என்று தெரிவிக்கலாம் என்று மன்சூர் அலிகான் தரப்புக்கு அறிவுறுத்தி, விசாரணையை பிப்ரவரி 7-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Tags:    

Similar News