மரணத்தில் சந்தேகம்.. மறைந்த அசாம் பாடகர் ஜூபின் கார்க் உடலுக்கு 2-வது முறை பிரேத பரிசோதனை
- அசாமி, ஹிந்தி மற்றும் வங்காளம் உள்பட பல மொழிகளில் இதுவரை 38,000 பாடல்களைப் பாடி சாதனை புரிந்துள்ளார்.
- ஸுபீனின் உடலுக்கு 4 கிலோ மீட்டர் தூரம் வரை வரிசையில் நின்று மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
பிரபல அசாமிய பாடகர் ஜூபின் கார்க் கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி சிங்கப்பூரில் கடலில் ஸ்கூபா டைவிங் செய்தபோது விபத்து ஏற்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
அசாமி, ஹிந்தி மற்றும் வங்காளம் உள்பட பல மொழிகளில் இதுவரை 38,000 பாடல்களைப் பாடி சாதனை புரிந்து அசாம் மக்களின் அன்பை சம்பாதித்தவர் இவர்.
அவரது உடல் சொந்த மாநிலமான அசாமுக்கு கொண்டுவரப்பட்டு தலைநகர் கவுகாத்தியில் இன்று இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
அவருக்கு இறுதி மரியாதை செலுத்த ஏராளமான மக்கள் அங்கு திரண்டு வருகின்றனர். ஸுபீனின் உடலுக்கு 4 கிலோ மீட்டர் தூரம் வரை வரிசையில் நின்று மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மறுபுறம் கார்க்கின் மரணம் குறித்த சந்தேகங்களும் எழுந்து வருகின்றன. இதனால் ஜூபின் கார்க்கின் மரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் என அம்மாநில முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா இன்று தெரிவித்தார்.
மேலும் அவரது உடலுக்கு 2 வது முறையாக பிரேத பரிசோதனை நடத்தவும் அவர் உத்தரவிட்டார்.
சிங்கப்பூரில் நடந்த முதல் பிரேதப் பரிசோதனையில், அவர் நீரில் மூழ்கி இறந்ததாகக் கூறப்பட்டுள்ளது.
இருப்பினும், பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, இரண்டாவது பிரேதப் பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
எய்ம்ஸ் மருத்துவர்களால் இந்த பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என ஹிமாந்தா தெரிவித்தார்.
கார்க்கின் உடல், பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு, நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9.30 முதல் 10 மணிக்குள் சருசஜாய் மைதானத்தில் இருந்து இறுதிப் பயணத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
மத்திய அரசு சார்பில், மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு இறுதிச் சடங்கில் பங்கேற்பார்.
சிஐடி போலீசார் கார்க்கின் மரணம் குறித்து விசாரிக்கும். இச்சம்பவம் தொடர்பாக, நிகழ்ச்சியின் முக்கிய ஏற்பாட்டாளர் ஷியாம்கானு மஹந்தா மற்றும் கார்க்கின் மேலாளர் சித்தார்த் சர்மா ஆகியோர் மீது ஏற்கனவே எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.