- படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் சிவகார்த்திகேயன் ஒரு வெற்றிப்பயணத்தை தொட்டுள்ளார்.
- ரவி மோகன் காட்டும் வில்லத்தனம் அற்புதமாக வெளிப்பட்டுள்ளது.
நாயகன் சிவகார்த்திகேயன் 1958 காலத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தீவிரம் காட்டுகிறார். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் உயர் காவலதிகாரி ரவிமோகன் சிவகார்த்திகேயனை ஒழித்துக்கட்ட நினைக்கிறார். இருவருக்கும் நடக்கும் சண்டையில் ரவி மோகன் ஒரு விரலை இழக்கிறார். அதன்பின் சிவகார்த்திகேயன் குழுவில் ஒரு இளைஞன் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கொல்லப்பட, சிவகார்த்திகேயன் போராட்டத்தை கைவிடுகிறார்.
அதன் பிறகு சில ஆண்டுகள் கழித்து சிவகார்த்திகேயன் முன்னெடுத்த அதே எதிர்ப்பு போராட்டத்தை அவரின் தம்பியான அதர்வா கையிலெடுக்கிறார். முதலில் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சிவகார்த்திகேயன் முடிவில் அவரும் மீண்டும் இந்தி எதிர்ப்பில் களம் இறங்குகிறார். ரவி மோகனும் சிவகார்த்திகேயனை அழித்தொழிக்க வேலை செய்கிறார்.
இறுதியில் சிவகார்த்திகேயன் ரவிமோகனின் மோதலின் முடிவு என்ன? இந்தி போராட்டத்தின் விளைவு என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் சிவகார்த்திகேயன் ஒரு வெற்றிப்பயணத்தை தொட்டுள்ளார். அபாரமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார். உடல் மொழி, ஆக்சன், வசனம் என அனைத்திலும் ஸ்கோர் செய்து இருக்கிறார்.
ரவி மோகன் காட்டும் வில்லத்தனம் அற்புதமாக வெளிப்பட்டுள்ளது. நாயகி ஸ்ரீலீலா முதல் படம் என்ற சுவடே தெரியாமல் நடித்துள்ளார். அதர்வாவின் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது. சேத்தன், குரு சோமசுந்தரம், கெஸ்ட் ரோலில் வரும் ராணா ஆகியோரும் நல்ல கவனம் ஈர்க்கின்றனர். இந்திரா காந்தி, பக்தவச்சலம் தோற்றத்தில் வருபவர்கள் நன்றாக நடித்துள்ளனர்.
இயக்கம்
1937-ல் துவங்கி, 1940-ல் தற்காலிக முடிவுக்கு வந்து, பின் 1963-ல் மூர்க்கமாக வெளிப்பட்ட இந்தி எதிர்ப்பு போராட்டத்தை வைத்து படத்தை பரபரப்பாக இயக்கியுள்ளார் இயக்குனர் சுதா கொங்கரா. படம் புரட்சி பேசினாலும் கமர்சியல் மீட்டரிலிருந்து விலகவில்லை. நடிகர்களை சிறப்பாக கையாண்டு இருக்கிறார்.
இசை
ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் இரண்டுமே படத்திற்கு பெரிய பலம்.
ஒளிப்பதிவு
ரவி கே சந்திரனின் ஒளிப்பதிவு பிரம்மாண்டத்தின் உச்சம். அன்றைய காலகட்டத்திற்கு ஏற்றார் போல் அழகாக படம் பிடித்திருக்கிறார்.