சினிமா செய்திகள்

இந்திய இயக்குனர்கள் கங்குவா திரைப்படத்த வாய பொளந்துட்டு பார்ப்பாங்க - சூர்யா

Published On 2024-11-07 17:23 IST   |   Update On 2024-11-07 17:23:00 IST
  • சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, திஷா பதானி உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘கங்குவா’
  • ‘கங்குவா’ திரைப்படம் நவம்பர் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

ஸ்டுடியோ க்ரீன், ஞானவேல்ராஜா தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, திஷா பதானி உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் 'கங்குவா' திரைப்படம் நவம்பர் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.

விழாவில் நடிகர் சூர்யா பேசியதாவது, "உலக நாயகன் கமல்ஹாசனுக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! ஆரோக்கியமாக சந்தோஷமாக அவர் நீண்ட நாட்கள் நம்முடன் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். 'கங்குவா' போன்ற ஒரு பரிசோதனை முயற்சியை தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தைரியமாக முன்னெடுத்துள்ளது பெரிய விஷயம்.

170 நாட்களுக்கும் மேல் இந்த படத்தை எடுத்திருப்போம். 'கங்குவா' படத்தில் அனைவரது உழைப்பும் இல்லாமல் இந்தப் படம் சாத்தியமாகி இருக்காது. வெற்றியுடைய ஒளிப்பதிவு நிச்சயம் இந்திய சினிமாவில் பெரிதாக பேசப்படும். சுப்ரீம் சுந்தர் மாஸ்டர் சொன்னால் நான் பத்தாவது மாடியில் இருந்து கூட குதிப்பேன். அந்த அளவுக்கு அவர் மீது நம்பிக்கை எனக்கிருக்கிறது. சண்டைக்குள் ஒரு கதை வைத்து அசத்திவிடுவார். படத்தின் ஆன்மா இசைதான். அதை சரியாகக் கொடுத்துள்ளார் தேவி ஸ்ரீ பிரசாத்.

இன்று மாலை வெளியாகவுள்ள மன்னிப்பு பாடல் எனக்கு மிகப்பிடித்தமானது. தொழில்நுட்பக் கலைஞர்கள் எல்லோருமே சிறப்பான உழைப்பைக் கொடுத்துள்ளார்கள். வழிபடக்கூடிய கடவுள் தீயாக, நெருப்பாக, குருதியாக இருந்தால் அந்த நில மக்கள் எப்படி இருப்பார்கள், அவர்கள் வழிபாடு என்ன என்ற விஷயங்களை இதில் கொண்டு வந்திருக்கிறோம். 'கங்குவா' திரைப்படம் வெறுமனே ஆக்ஷன் படமாக மட்டும் இல்லாமல் நீங்கள் எடுத்து செல்ல நல்ல விஷயமும் இருக்கும். மன்னிப்பை பற்றி இந்தப் படம் உயர்வாகப் பேசும். 'கங்குவா' தமிழ் சினிமாவை அடுத்த நிலைக்கு எடுத்து செல்லும். 3000 பேரின் உண்மையான உழைப்பிற்கு நிச்சயம் பலன் கிடைக்கும். படம் நெருப்பு மாதிரி இருக்கும். இந்திய திரையுலகில் உள்ள அனைத்து இயக்குனர்களும், கிரியேட்டர்களும் இந்த படத்த வாய பொளந்து பார்க்க போறாங்க உங்கள் அன்பு 'கங்குவா' படத்திற்கு தேவை" என்றார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Tags:    

Similar News