என்னை கைது பண்ணிட்டாங்களா! - வீடியோ வெளியிட்ட பிக்பாஸ் தினேஷ்
- வள்ளியூரில் ஒரு வழக்கு தொடர்பாக பல வருடமாக போராடி வருகிறேன்.
- என் எதிர் தரப்பின்னர் எனக்கு எதிராக புகார் கொடுத்துள்ளனர்
சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகர் தினேஷ், பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு மேலும் புகழ்பெற்றார்.
இந்நிலையில், பண மோசடி புகாரில் பிரபல சீரியல் நடிகரும், பிக்பாஸ் பிரபலமுமான நடிகர் தினேஷை போலீசார் கைது செய்ததாக தகவல் வெளியானது.
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள தண்டையார்குளத்தை சேர்ந்த கருணாநிதி என்பவர் அளித்த புகாரில், "அரசு வேலை வாங்கி தருவதாக சீரியல் நடிகர் தினேஷ் கடந்த 2022-ல் ரூ.3 லட்சம் பெற்றார். ஆனால் அரசு வேலை வாங்கி தரவில்லை. பணத்தை கேட்டபோது கொடுக்காமல் அலைக்கழித்ததுடன் தன்னை தாக்கியதாகவும் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின் பேரில் நடிகர் தினேஷை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், பணமோசடி புகாரில் தான் கைது செய்யப்பட்டதாக வெளியான தகவல் போலி என்று நடிகர் தினேஷ் வீடியோ வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் பேசிய தினேஷ், "கருணாநிதி என்ற நபர் அவரது மனைவிக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பணம் பெற்று ஏமாற்றி விட்டதாகவும் இது குறித்து அவர் என்னிடம் பேசும்போது நான் அவரை தாக்கியதாகவும் பொய்யான புகார் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது.
வள்ளியூரில் ஒரு வழக்கு தொடர்பாக பல வருடமாக போராடி வருகிறேன். அதற்காக என் எதிர் தரப்பின்னர் எனக்கு எதிராக புகார் கொடுத்துள்ளனர்" என்று தெரிவித்தார்.