சினிமா செய்திகள்
டி.சிவா

கோப்ரா பட இயக்குனரை வன்மையாக கண்டிக்கிறேன் - தயாரிப்பாளர் டி.சிவா காட்டம்

Published On 2022-02-15 17:56 IST   |   Update On 2022-02-15 18:14:00 IST
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள 'கோப்ரா' படத்தின் படப்பிடிப்பு முடிந்ததாக பதிவிட்ட இயக்குனரை, தயாரிப்பாளர் டி.சிவா காட்டமாக விமர்சித்திருக்கிறார்.
டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற வெற்றி படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து, அடுத்ததாக ’கோப்ரா’ படத்தை இயக்கி வருகிறார். விக்ரம் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், ஸ்ரீநிதி ஷெட்டி, மியா, இர்பான் பதான், கே.எஸ்.ரவிக்குமார், ரோஷன் மேத்யூ, பத்மப்ரியா ஜானகிராமன், கனிகா, ஷாஜி சென் போன்ற பலர் நடித்துள்ளனர். 


கோப்ரா படக்குழு

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தத் திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ தயாரித்துள்ளது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாக இருக்கிறது.இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, கொல்கத்தா, கேரளா, ரஷ்யா போன்ற இடங்களில் நடந்து வந்தது. விக்ரம் கிட்டத்தட்ட 20க்கும் மேற்ப்பட்ட தோற்றங்களில் நடித்துள்ளார். 2019-இல் தொடங்கப்பட்ட கோப்ரா படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கு போன்ற பல காரணங்களால் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் நடைப்பெற்று வந்த நிலையில் தற்போது முடிந்துள்ளது. இதனை இயக்குனர் அஜய் ஞானமுத்து அவருடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டு விக்ரம் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் நன்றியைத் தெரிவித்திருந்தார். 



இந்த பதிவில் தயாரிப்பாளருக்கு நன்றி தெரிவிக்கவில்லை என்று பலரும் கேள்வி எழுப்பிவந்த நிலையில், தயாரிப்பாளர் டி.சிவா இந்த பதிவை காட்டமாக விமர்சித்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் “போட்ட பட்ஜெட்டை விட பல மடங்கு செலவை இழுத்து விட்டு, அதைத் தாங்கிக்கொண்டு படத்தை முடித்துக்கொடுத்த தயாரிப்பாளர் லலித்குமாருக்கு ஒரு நன்றி கூட சொல்லாத இயக்குநரை வன்மையாகக் கண்டிக்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.


அஜய் ஞானமுத்து


தயாரிப்பாளர் டி.சிவாவின் பதிவிற்கு பதிலளிக்கும் வகையில் இயக்குனர் அஜய் ஞானமுத்து விளக்கம் அளித்து பதில் பதிவிட்டிருக்கிறார். அதில், “சார், கோப்ராவின் பட்ஜெட் அதிகமானதற்குக் காரணம் நான் இல்லை என்பதை எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் என்னால் நிரூபிக்க முடியும். புரளிகளை விட ஆதாரங்கள் தெளிவாக, சத்தமாகப் பேசும். குழு என்றால் அது தயாரிப்பாளரும் சேர்ந்துதான். நான் என்றும் அவரை கைவிடவில்லை” என்று தெரிவித்திருக்கிறார்.


Similar News