சினிமா செய்திகள்
நானி

நான் நடிகராக மாற அவர்கள் படம்தான் காரணம் - நானி

Published On 2021-12-17 15:44 IST   |   Update On 2021-12-17 15:44:00 IST
தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகர் நானி, ஷியாம் சிங்கா ராய் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்துக் கொண்டு பேசினார்.
தெலுங்கில் முன்னணி நட்சத்திரமாக இருக்கும் நானி நடிப்பில், பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ள திரைப்படம் “ஷியாம் சிங்கா ராய்”. நிஹாரிகா என்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரிப்பாளர் வெங்கட் போயனபள்ளி தயாரித்துள்ள இப்படத்தை, இயக்குனர் ராகுல் சன்கிரித்யன் இயக்கியுள்ளார். மறுபிறவியை மையமாக கொண்டு, இப்படத்தில், நானி இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். சாய்பல்லவி, கிரித்தி ஷெட்டி, மடோனா செபாஸ்டியன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள “ஷியாம் சிங்கா ராய்” படம் டிசம்பர் 24 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.

இப்படம் குறித்து நானி கூறும்போது, ‘நான் ஆரம்பத்தில் சென்னையில் ஷூட் செய்யும் போது சமுத்திரகனி சாரை பார்க்காமல் போக மாட்டேன். அவர் இப்போது தெலுங்கில் பிஸியான நடிகராகிவிட்டார். எல்லா பேட்டிகளிலும் நான் ஏன் நடிகரானேன் எனக் கேட்கும் போது, கமல் சார் படங்கள் மணி சார் படங்கள் தான் காரணம் என்று சொல்லியிருக்கிறேன்.



தமிழ் படங்களுடன் எனக்கு உணர்வுப்பூர்வமான பந்தம் இருக்கிறது. அவற்றை பார்த்து தான் வளர்ந்திருக்கிறேன். நான் ஈ படத்திற்கு பிறகு இங்கு வரும்போது ரசிகர்கள் மிகப்பெரிய அன்பை தந்திருக்கிறார்கள். ஆனால் அடுத்த சில படங்கள் இங்கே சரியாக போகவில்லை. எனவே தெலுங்கில் கவனம் செலுத்தி விட்டு, தமிழில் சரியான படத்தை செய்ய காத்திருந்தேன்.

ஷியாம் சிங்கா ராய் படத்தின் கதை கேட்டபோது தமிழிலும் செய்யலாம் என சொன்னேன். உங்களுக்கு சரியான படத்தை கொண்டு வந்ததாக நினைக்கிறேன். ஷியாம் சிங்கா ராய் படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். இப்படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் உங்கள் அனைவரையும் வந்து சந்திக்கிறேன். நான் கேரக்டருக்காக உடல் எடை எதுவும் மாற்றவில்லை. ஏனெனில் இரண்டு பாத்திரங்களையும் ஒரே நேரத்தில் படமாக்கினோம். 

நான் கமல் சார், ரஜினி சாரின் தீவிர ரசிகன். இப்போது ஆந்திராவிலும் இங்கும் பல படங்கள் ஹிட்டாகி வருகிறது. தமிழ் நடிகர் ஒருவரும் தெலுங்கு நடிகர் ஒருவரும் இணைந்து படங்கள் உருவாகும் காலம் வரும் என்று நினைக்கிறேன். உலகத்திலேயே ஒரு இயக்குனரின் படத்தில் நான் நடிக்க ஆசைப்படுகிறேன் எனக்கேட்டால் மணி சாரை தான் சொல்வேன். அவரின் தீவிர ரசிகன் நான்’ என்றார்.

Similar News