சினிமா
கார்த்திக் ராஜ்

நடிக்க விடாமல் தடுக்கிறார்கள் - சின்னத்திரை நடிகர் வேதனை

Published On 2021-07-13 22:27 IST   |   Update On 2021-07-13 22:27:00 IST
படத்தில் நடிக்க விடாமல் தடுத்து சிலர் அரசியல் செய்வதாக 'செம்பருத்தி' சீரியல் மூலம் பிரபலமான கார்த்திக் ராஜ் வேதனை தெரிவித்துள்ளார்.
தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'செம்பருத்தி' சீரியல் மூலம் பலருடைய கவனத்தை ஈர்த்தவர் கார்த்திக் ராஜ். கடந்த ஆண்டு திடீரென 'செம்பருத்தி' தொடரிலிருந்து கார்த்திக் ராஜ் நீக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது. அதன் பிறகு எந்தவொரு தொடரிலும் கார்த்திக் ராஜ் நடிக்கவில்லை.

இந்நிலையில் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வீடியோ ஒன்றை கார்த்திக் ராஜ் பகிர்ந்துள்ளார். அதில் அவர், ''அனைவருக்கும் வணக்கம். இந்த வீடியோவில் நான் என்னுடைய அடுத்த 'புராஜெக்ட்' குறித்துப் பேச வேண்டும் என்று காத்திருந்தேன். ஆனால், என்னால் அப்படிச் செய்ய முடியவில்லை. காரணம் என்னைச் சிலர் எந்த புராஜெக்ட்டும் செய்ய விடாமல் தடுக்கின்றனர். அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள்.

சிலர் பின் வேலைகளைச் செய்து நான் படம் நடிக்க முடியாதபடி செய்துவிட்டனர். வெளிப்படையாகச் சொல்ல வேண்டும் என்றால் 'உன்னால் முடிந்தால் படம் நடித்துக் காட்டு' என்று சவால் விடுகிறார்கள். உங்கள் ஆதரவு இருந்தால், கண்டிப்பாக நல்ல படத்தில் நடிக்க என்னால் முடியும். அந்த நம்பிக்கையில் கே ஸ்டுடியோஸ் என்ற ஒரு நிறுவனத்தைத் தொடங்கி இருக்கிறேன். அடுத்த புராஜெக்ட்டை அதில்தான் பண்ண இருக்கிறேன்.



பெரிதாக முதலீடு செய்து பெரிய படம் எடுக்கும் அளவுக்கு எனக்குப் பின்னணி இல்லை. என் வாழ்க்கையில் இதுவரை எல்லாச் சூழ்நிலைகளிலும் எனக்கு ஆதரவாக இருந்தது நீங்கள் மட்டும்தான். இதுவரை நான் உங்களிடம் எதுவும் கேட்டதில்லை. முதல் முறையாகக் கேட்கிறேன். சிறியதாக இருந்தாலும் சரி, பெரியதாக இருந்தாலும் சரி, உங்களால் எவ்வளவு தொகை முடியுமோ அதை எனக்கு அனுப்புங்கள். நீங்கள் ஆதரவளித்தால்தான் இது முடியும்'' என்று கார்த்திக் ராஜ் பேசியுள்ளார்.

Similar News