சினிமா
ரவிக்குமார்

மாஸ்க் பற்றிய விழிப்புணர்வு கூட மக்களிடம் இல்லை - இயக்குனர் ரவிக்குமார் வேதனை

Published On 2021-05-23 17:31 IST   |   Update On 2021-05-23 17:31:00 IST
வைரஸிற்கு எதிரான பாதுகாப்பான தடுப்பு நடவடிக்கை என்ன என்பது இன்னமும் மக்களுக்கு சரிவர தெரியவில்லை என இயக்குனர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் நாளை முதல் தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. இதன் காரணமாக இன்று ஒரு நாள் அனைத்து கடைகளும் வழக்கம் போல் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒரு வாரத்துக்கு தேவையான பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. 

இந்நிலையில் ‘இன்று நேற்று நாளை’, ‘அயலான்’ போன்ற படங்களை இயக்கிய ரவிக்குமார், மக்கள் விழிப்புணர்வின்றி இருப்பதாக வேதனை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: “திருப்பூரில் பெரும்பாலோனோர் துணியிலான பனியன் கிளாத் வகையை சேர்ந்த மாஸ்க்கை அணிந்துள்ளனர். துவைத்து பயன்படுத்த வசதியாக இருப்பதால் பெரும்பாலும் இதை பயன்படுத்துகின்றனர். 

ஆனால் இந்த ரக மாஸ்க்குகள் கொரோனாவை ஒருபோதும் தடுக்காது. இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால் அதை தாடைக்கு கீழ் அணிந்து சுற்றுகிறார்கள். கூட்டமில்லாத ஒரு மளிகை கடையில் வண்டியை நிறுத்தினேன். தாடைக்கு கீழ் மாஸ்க் அணிந்தபடி கடைக்காரர் இருந்தார். அவரிடம் அண்ணா மூக்குக்கு மாஸ்க் போடுங்க என்றேனன். வேண்டா வெறுப்பாக செய்தார். 


ரவிக்குமார்

ஒரு அக்கா சேலையை மூக்கால் பொத்தியபடி வந்தார். வைரஸிற்கு எதிரான பாதுகாப்பான தடுப்பு நடவடிக்கை என்ன என்பது இன்னமும் மக்களுக்கு சரிவர தெரியவில்லை. மாஸ்க் பற்றிய விழிப்புணர்வு கூட இல்லாமல் உள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் திருப்பூர் 5வது இடத்தில் உள்ளது. இன்னும் முன்னுக்கு வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Similar News