சினிமா
பிக்பாஸ் செட்டுக்கு அதிகாரிகள் சீல் வைத்தபோது எடுத்த புகைப்படம்

‘பிக்பாஸ்’ வீட்டுக்கு சீல் - விதிமுறைகளை மீறி படப்பிடிப்பு நடத்தியதால் அதிகாரிகள் நடவடிக்கை

Published On 2021-05-20 07:42 IST   |   Update On 2021-05-20 07:45:00 IST
மலையாள ‘பிக்பாஸ்’ அரங்கில் விதிமுறைகளை மீறி படப்பிடிப்பு நடத்தப்பட்டதால் வருவாய்த்துறை அதிகாரிகள் அதிரடியாக ‘சீல்’ வைத்தனர்.
நடிகர் மோகன்லால் தொகுத்து வழங்கும் மலையாள ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் படப்பிடிப்பு, பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கம், ஈ.வி.பி. பிலிம் சிட்டியில் பிரமாண்டமான அரங்கு அமைத்து நடைபெற்று வந்தது. இந்த படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்த 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

கொரோனா ஊரடங்கு காரணமாக வருகிற 31-ந் தேதி வரை தொலைக்காட்சி மற்றும் சினிமா என எந்தவித படப்பிடிப்பும் நடக்காது என பெப்சி தொழிற்சங்க தலைவர் ஆர்.கே.செல்வமணி அறிவித்து இருந்தார். 

ஆனால் 6 பேருக்கு கொரோனா உறுதியான பிறகும், ஊரடங்கு விதிமுறைகளை மீறி மலையாள ‘பிக்பாஸ்’ படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருவதாக வந்த தகவலின்பேரில் போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள், மலையாள ‘பிக்பாஸ்’ படப்பிடிப்பு நடைபெறும் அரங்கிற்கு சென்று நிகழ்ச்சி தயாரிப்பு நிர்வாகத்திடம் விசாரணை செய்தனர்.


பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்படும் நடிகர்- நடிகைகள்

இதையடுத்து விதிமுறைகளை பின்பற்றாத மலையாள ‘பிக்பாஸ்’ அரங்கிற்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்பிறகு மாவட்ட கலெக்டருடன் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். அதில், கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத காரணத்தால் மலையாள ‘பிக்பாஸ்’ அரங்கத்திற்கு வருவாய்த் துறை அதிகாரிகள் ‘சீல்’ வைக்க முடிவு செய்தனர். இதையடுத்து ‘பிக்பாஸ்’ அரங்கத்தின் 3 நுழைவு வாயிலுக்கும் அதிரடியாக ‘சீல்’ வைத்தனர்.

இதையடுத்து ‘பிக்பாஸ்’ அரங்கத்திற்குள் இருந்த 7 நடிகர்கள், நடிகைகள் மற்றும் 60-க்கும் மேற்பட்ட ஊழியர்களும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது

Similar News