சினிமா
ராகவா லாரன்ஸ்

சொற்களால் என்னை ரொம்பவே அடித்துவிட்டார்கள் - ராகவா லாரன்ஸ்

Published On 2021-01-13 12:54 GMT   |   Update On 2021-01-13 12:54 GMT
இயக்குனராகவும், நடிகராகவும் இருக்கும் ராகவா லாரன்ஸ், சொற்களால் என்னை ரொம்பவே அடித்துவிட்டார்கள் என்று கூறி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மருத்துவர்களின் அறுவுறுத்தலைத் தொடர்ந்து ரஜினிகாந்த், தான் அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முடிவை திரும்பப் பெறுவதாக நீண்ட அறிக்கை மூலமாகத் தெரிவித்தார். இதையடுத்து தமிழகம் முழுவதும் ஆங்காங்கே ரஜினி ரசிகர்களும், ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளும் தங்களின் அதிருப்தியைத் தெரிவித்து வருகின்றனர். இதற்காக வள்ளுவர் கோட்டத்தில் ஒரு போராட்டம் நடந்தது. இதில் ரஜினி ரசிகரும் நடிகருமான ராகவா லாரன்ஸ் பங்கேற்கவில்லை. இது தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், ராகவா லாரன்ஸ் ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளார். 

அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: இனிமேல், எனது அனைத்து பதிவுகளும் அறிக்கைகளும் எனது தனிப்பட்ட கருத்துகளாகவே இருக்கும். அதில், எனது குரு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை தொடர்புபடுத்தவே மாட்டேன். இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால், நல்லதோ கெட்டதோ என்னுடன் மட்டுமே இருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன். ஒரு சில குழுவினர் சொற்களால் ரொம்பவே அடித்துவிட்டார்கள். நானே மன்னிக்க மறக்க நினைத்தாலும் சில வார்த்தைகளை மறக்க இயலவில்லை. யார் மறந்தாலும் அவற்றை நான் மறக்க மாட்டேன். 

காலம் எல்லாவற்றிற்கும் பதில் சொல்லும். வள்ளுவர் கோட்டத்தில் நடந்த போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு என்னை நிறைய பேர் வற்புறுத்தினீர்கள். இயக்குநர் சாய் ரமணி வாயிலாக நிறைய வாய்ஸ் நோட்டை நான் கேட்டேன். இன்றளவும் நிறைய பேர் நான் தலைவரிடம் அவருடைய முடிவை மாற்றிக் கொள்ள வற்புறுத்துகிறார்கள். அதனாலேயே இன்று இந்த அறிக்கையை நான் வெளியிடுகிறேன். தலைவரின் முடிவால் நீங்கள் அனைவரும் கொண்ட வேதனையையே நானும் எதிர்கொள்கிறேன்.



தலைவர் வேறேதும் காரணம் சொல்லியிருந்தால் நான் அவரிடம் முடிவை மாற்றிக் கொள்ள கெஞ்சியிருப்பேன். ஆனால், அவரோ உடல்நிலையைக் காரணமாகக் கூறிவிட்டாரே. இப்போது நாம் அவரை நிர்பந்தித்து அதனால் அவரும் மாறி பின்னர் அவரின் உடல்நிலைக்கு ஏதாவது நேர்ந்தால், வாழ்நாளுக்கும் நாம் குற்ற உணர்வோடு அல்லவா இருக்க வேண்டும். அரசியலில் பிரவேசிக்காவிட்டாலும் அவர் என்றுமே எனது குரு தான். அவருடன் நெருங்கிப் பேசுவதால் எனக்கு அவரின் உடல்நிலை பற்றி நன்றாகத் தெரியும். இப்போது நாம் செய்ய வேண்டியதெல்லாம், அவருடைய உடல் நலனுக்கும் உள அமைதிக்கும் பிரார்த்தனை செய்வது மட்டுமே. அவர் என்றும் நமது பிரார்த்தனையில் இருப்பார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News