சினிமா
மதுபாலா

ஹாத்ரஸ் சம்பவம்.... குற்றவாளிகளை நடுரோட்டில் வைத்து தூக்கிலிட வேண்டும் - நடிகை மதுபாலா ஆவேசம்

Published On 2020-10-07 07:28 GMT   |   Update On 2020-10-07 07:31 GMT
குற்றவாளிகளை பொது இடத்தில் வைத்து தூக்கிலிட வேண்டும் என ஹாத்ரஸ் பாலியல் பலாத்கார சம்பவம் தொடர்பாக நடிகை மதுபாலா ஆவேசமாக பேசி உள்ளார்.
உத்தர பிரதேச மாநிலத்தின் ஹாத்ரஸில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக கூறப்பட்ட பெண் உயிரிழந்த சம்பவத்தில் சிபிஐ விசாரணைக்கு மாநில அரசு பரிந்துரைத்த நிலையில், அந்த வழக்கை சுப்ரீம் கோர்ட் கண்காணிப்புடன் சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று அம்மாநில அரசு கோரியிருக்கிறது.

இதற்கிடையே, ஹாத்ரஸ் சம்பவம் மட்டுமின்றி நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் நடக்கும் பாலியல் வன்கொடுமை சம்பவங்களுக்கு பல துறையை சேர்ந்தவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் ஜென்டில்மேன் பட நடிகை மதுபாலா தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் உணர்ச்சி பொங்கப் பேசியிருக்கிறார். கொரோனா வைரஸ் பெருந்தொற்றில் மக்கள் எதிர்மறை தாக்கத்தை கூட சாதமாக எதிர்கொண்டு வாழப்பழகியதை பற்றி சில நிமிடங்கள் பேசிய அவர், பின்னர் பாலியல் வல்லுறவு குற்றவாளிகளின் செயல்பாடு குறித்தும் பேசியுள்ளார், அவர்களை சட்டம் இயற்றும் இடத்தில் உள்ளவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதையும் கூறியிருக்கிறார்.


அதில்  “சமீப காலமாக நமது நாட்டில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்கொடுமைகள் கடும் வேதனை அடைய வைக்கிறது. இது மனிதன் மனிதனுக்கு எதிராக நடத்தும் யுத்தம் ஆகும். அவர்களால் எப்படி இது போன்ற கொடும் செயல்களை செய்ய முடிகிறது என தெரியவில்லை. பெண்களை பலாத்காரம் செய்பவர்களை பொதுமக்கள் முன்னிலையில் நடுரோட்டில் தூக்கிலிட வேண்டும். அதை தொலைக்காட்சி மூலம் உலகம் முழுவதும் காண்பிக்க வேண்டும் என அதிகாரிகளிடம் நான் வேண்டி கேட்டுக்கொள்கிறேன். 

இனி யாரும் இதுபோன்ற கொடூர செயலில் ஈடுபட கூடாது. பொது இடங்களில் பெண்களை தவறான கண்ணோட்டத்துடன் தொடும்போதும், பார்க்கும் போதும் பெண்கள் அனுபவிக்கும் மனநிலை யாருக்கும் தெரியாது. எனவே, இதுபோன்ற கொடுமைகளை தடுக்க கடும் சட்டம் நமது நாட்டுக்கு மிகவும் அவசியம் என்று நடிகை மதுபாலா ஆவேசத்துடன் கூறியுள்ளார்.

Tags:    

Similar News