சினிமா
சிரஞ்சீவி

சைரா வரலாறு இந்திய சரித்திரத்தில் மறைக்கப்பட்டுள்ளது- சிரஞ்சீவி

Published On 2019-09-29 11:00 GMT   |   Update On 2019-09-29 11:00 GMT
சைரா நரசிம்ம ரெட்டியின் வரலாறு இந்திய சரித்திரத்தில் மறைக்கப்பட்டுள்ளதாக நடிகர் சிரஞ்சீவி தெரிவித்துள்ளார்.
சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் சிரஞ்சீவி, அமிதாப் பச்சன், சுதீப், விஜய் சேதுபதி, நயன்தாரா, தமன்னா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சைரா நரசிம்ம ரெட்டி’. சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் தயாரித்துள்ள இந்தப் படத்தை தமிழில் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிடவுள்ளது. இந்தப் படம் தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் சிரஞ்சீவி, ராம் சரண், தமன்னா உள்ளிட்டோருடன் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினரும் கலந்து கொண்டார்கள். 

இந்த விழாவில் சிரஞ்சீவி பேசும் போது, “நான் நடிகராக பிறந்தது சென்னையில் தான். அந்த இடத்துக்கு நீண்ட இடைவேளைக்குப் பின் வந்துள்ளேன். 12 ஆண்டுகளாக இந்தக் கதை பண்ண காத்திருந்தேன். அப்போது படத்தின் பொருட்செலவு அதிகமாக இருந்தது. பின்பு அரசியல் சென்றேன். 9 ஆண்டுகளாக எந்தவொரு படத்திலும் நடிக்காமல் இருந்தேன். பின்னர் தமிழ் படமான ‘கத்தி’ தெலுங்கு ரீமேக்கில் நடித்தேன். படம் ஹிட். மீண்டும் மக்கள் ஏற்றுக்கொண்டார்கள். 



’பாகுபலி’ பார்த்தவுடன், ’சைரா’ படத்தைப் பல கோடி பொருட்செலவில் எடுக்க முடிவு செய்தோம். என் மகனே படத்தைத் தயாரித்தார். பொதுவாக சினிமாவில் மகனை அப்பா தான் விளம்பரப்படுத்துவார். ஆனால் இந்த படத்தை தயாரித்து என் மகன் என்னை விளம்பரம் செய்து வருகிறான். என் மகன் ராம் சரணுக்கு 2 வது படமே வரலாற்று படமாக அமைந்து விட்டது. ஆனால் எனக்கு இப்போது தான் அந்த வாய்ப்பு கிடைத்தது. என் நண்பர் கமல்ஹாசன் தமிழ் பதிப்புக்கு படத்தின் அறிமுக காட்சிக்கு பின்னணிக் குரல் கொடுத்துள்ளார். எனக்கு தமிழில் அரவிந்த்சாமி டப்பிங் பேசியிருக்கிறார். 

சைரா வரலாறு இந்தியச் சரித்திரத்தில் மறைக்கப்பட்டுள்ளது. வெள்ளையர்களுக்கு எதிராக பலருக்கு முன்னதாகவே போர் தொடுத்தவர் சைரா. இது எந்த மொழி படமும் அல்ல. இந்தியா முழுக்க பார்க்க வேண்டிய இந்தியப் படம். ‘சைரா’வில் நடித்த அமிதாப்புக்கு நன்றி. மிகுந்த பிசியான நேரத்திலும் இந்தப் படத்தில் எங்களுக்காக நடித்த கொடுத்த விஜய் சேதுபதிக்கு நன்றி. என்னை தான் எளிமையானவர் என கூறுவார்கள். ஆனால், என்னைவிட விஜய் சேதுபதி தான் எளிமையானவர். நயன்தாரா, தமன்னா சிறப்பான நடிப்பைத் தந்துள்ளனர்” என்று பேசினார் சிரஞ்சீவி.
Tags:    

Similar News