சினிமா
கமல்ஹாசன், ஞானவேல்ராஜா

ஞானவேல்ராஜா விளக்கம் அளிக்காவிடில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்- கமல் நோட்டீஸ்

Published On 2019-09-29 07:04 GMT   |   Update On 2019-09-29 07:31 GMT
ஞானவேல்ராஜாவிடம் ரூ.10 கோடி வாங்கவில்லை என்றும் இது தொடர்பாக விளக்கம் அளிக்காவிடில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கமல் தரப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கமல்ஹாசன் நடிப்பில் 2015-ம் ஆண்டு “உத்தம வில்லன்” படம் வெளியானது. ரமேஷ் அரவிந்த் இயக்கி இருந்தார். இப்படத்தை கமல்ஹாசன், லிங்குசாமியின் தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் ஆகியவை தயாரித்து இருந்தன. இதற்கிடையே “உத்தம வில்லன்” படம் வெளியீட்டின் போது கமல்ஹாசன் ரூ.10 கோடி வாங்கியதாகவும், அதை திருப்பி தரவில்லை என்று தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தார். இது தமிழ் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுபற்றி கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தரப்பில் கூறும்போது, “தங்களுக்கும், ஞானவேல்ராஜாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திடம் மட்டுமே எங்களின் பேச்சுவார்த்தை நடைபெற்றது. கமல்ஹாசனுக்கு, ஞானவேல்ராஜா எந்த பணமும் வழங்கவில்லை. அவருக்கும் கமலுக்கும் எந்த வி‌ஷயத்திலும் தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தை இருந்தது இல்லை. கமலின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் புகார் அளித்து இருக்கிறார். இவ்விவகாரத்தில் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டது. 



இந்த நிலையில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் நோட்டீஸ் ஒன்றை அனுப்பி உள்ளது. அதில் கூறி இருப்பதாவது:- “கடந்த 2 நாட்களாக நீங்கள் (ஞானவேல்ராஜா) கமல்ஹாசனுக்கு ரூ.10 கோடி கொடுத்ததாக செய்திகள் ஊடகங்களில் வந்து கொண்டு இருக்கிறது. கமல்ஹாசன் ரூ.10 கோடி வாங்கியதாக கூறுவது அப்பட்டமான பொய். நீங்கள் கூறுவதை நாங்கள் மறுக்கிறோம். 

உங்களது தயாரிப்பு நிறுவனத்துக்கு கமல்ஹாசன் படம் நடித்து தருவதாக உறுதி அளித்தார் என்பதில் கூட உண்மையில்லை. கமல்ஹாசனுக்கு நீங்கள் ரூ.10 கோடி அளித்ததற்கான ஆதாரங்கள் மற்றும் உங்களுக்கு படம் நடித்து கொடுப்பதாக கமல்ஹாசன் உறுதி அளித்ததாக நீங்கள் கூறுவதற்கான ஆதார விவரங்களையும் உடனடியாக அளிக்குமாறு வலியுறுத்துகிறோம் அல்லது தயாரிப்பாளர் சங்கத்தில் நீங்கள் அளித்த புகாரை வாபஸ் பெற்று அது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இதனை நீங்கள் செய்ய தவறும்பட்சத்தில் உங்கள் மீது ராஜ்கமல் பிலிம் நிறுவனம் சிவில் மற்றும் குற்ற நடவடிக்கை எடுக்கும் நிலைக்கு தள்ளப்படும் என்பதை நீங்கள் கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அந்த நோட்டீசில் கூறப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News