சினிமா

பிரபல நகைச்சுவை நடிகர் கிரேஸி மோகன் காலமானார்

Published On 2019-06-10 08:50 GMT   |   Update On 2019-06-10 08:50 GMT
பல படங்களில் வசனகர்த்தாவாகவும், நடிகராகவும் பணியாற்றிய கிரேஸி மோகன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.
மோகன் ரங்காச்சாரி என்ற இயற்பெயர் கொண்ட கிரேஸி மோகன் அடிப்படையில் மெக்கானிக் எஞ்சினியரிங் படித்தவர். கல்லூரிக் காலங்களில் குட்டி குட்டி நாடகங்களைப் போட்டவருக்கு நல்ல வேலை கிடைத்தும் அதில் மனம் லயிக்காமல் சபாக்களில் நாடகங்கள் போட ஆரம்பித்தார். 

சுமார் 3000க்கும் மேற்பட்ட நாடகங்களை நிகழ்த்தியிருக்கும் கிரேஸி மோகனை முதன் முதலில் தனது ‘பொய்க்கால் குதிரைகள்’ படத்துக்கு வசனம் எழுத வைத்தவர் இயக்குநர் பாலசந்தர்.

பின்னர் கமலுடன் ‘சதி லீலாவதி’ படத்தில் வசனகர்த்தாவாகப் பணியாற்ற ஆரம்பித்த கிரேஸி மோகன் அடுத்து அவருடன் தொடர்ந்து ’காதலா காதலா’, ‘மைக்கேல் மதன காமராஜன்’, ’அபூர்வ சகோதர்கள்’, ’இந்தியன்’, ’அவ்வை சண்முகி’, ’தெனாலி’, ’பஞ்ச தந்திரம்’ உட்பட பல படங்களில் பணியாற்றினார். 



வசனகர்த்தாவாகப் பணியாற்றிய அதே சமயம் சுமார் 10க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை நடிகராகவும் தோன்றியிருக்கிறார். தனது டைமிங் காமெடியால் மக்களை சிரிக்க வைத்தவர் கிரேஸி மோகன்.

தற்போது உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிகிச்சை பலனின்றி பிற்பகல் 2 மணிக்கு கிரேஸி மோகன் காலமானார். இவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
Tags:    

Similar News