சினிமா

சிவனைப் பற்றி பேசும் மாயன்

Published On 2019-02-14 18:49 IST   |   Update On 2019-02-15 12:13:00 IST
ஜே.ராஜேஷ் கண்ணன் மற்றும் ஜிகேவிஎம் எலிபென்ட் பிக்சர்ஸ் சார்பில் டத்தோ கணேஷ் மோகன சுந்தரம் இணைந்து தயாரிக்கும் ‘மாயன்’ திரைப்படம் சிவனைப் பற்றி பேச இருக்கிறது. #Mayan
பாக்ஸ் க்ரோ ஸ்டூடியோஸ் சார்பில் ஜே.ராஜேஷ் கண்ணன் மற்றும் ஜி கே வி எம் எலிபென்ட் பிக்சர்ஸ் சார்பில் டத்தோ கணேஷ் மோகன சுந்தரம் இணைந்து தயாரிக்கும் ‘மாயன்’ என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இவ்விழாவில் இந்தியாவிற்கான மலேசிய தூதர் லோகிதாசன் தன்ராஜ், ஜி கே வி எம் எலிபென்ட் பிக்சர்ஸ் நிறுவனர் ‘டத்தோ’ மோகன சுந்தரம், ‘டத்தின்’ குணவதி மோகன சுந்தரம், இணை தயாரிப்பாளர் ‘டத்தோ’ கணேஷ் மோகன சுந்தரம், படத்தின் நாயகன் வினோத், நடிகர் சௌந்தர், நாயகி பிரியங்கா அருள்முருகன், பின்னணி இசையமைப்பாளர் ஜோன்ஸ் ரூபர்ட், ஒளிப்பதிவாளர் அருண் பிரசாத், கலை இயக்குநர் வனராஜ், வி எப் எக்ஸ் மற்றும் டிசைனர் ரமேஷ் ஆச்சார்யா, ஆடை வடிவமைப்பாளர் நிவேதா ஜோசப், யோகீசன் இவர்களுடன் படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான ஜே.ராஜேஷ் கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

டத்தோ மோகன சுந்தரம் பேசுகையில், “எங்கள் நிறுவனத்தின் சார்பில் மலேசியாவில் ‘வில்லவன்’ என்ற படத்தை தயாரித்திருக்கிறோம். அதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் ஐயாய் (AIYAI) என்ற ஆங்கிலப்படத்தையும் தயாரித்திருக்கிறோம். என்னுடைய பெற்றோர்கள் பிறந்த மண் தமிழகத்திலுள்ள நாகப்பட்டினம். அதனால் தமிழ்நாட்டில் வந்து ஒரு தமிழ் படத்தை தயாரிக்க ஆசைப்பட்டோம். அந்த தருணத்தில் இந்த படத்தின் இயக்குநரும், தயாரிப்பாளருமான ராஜேஷ் கண்ணன் அவர்களைச் சந்தித்தேன். அவருடன் இணைந்து தயாரிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்” என்றார்.

மலேசிய தூதர் லோகிதாசன் தன்ராஜ் பேசுகையில், “இந்தியாவிலிருந்து ஏராளமான தயாரிப்பாளர்கள் மலேசியாவிற்கு சென்று படமெடுப்பதற்கு நாங்கள் உதவி செய்திருக்கிறோம். சென்னையிலிருக்கும் துணை தூதரகம் மூலமாக ஏராளமான வழிகாட்டல்களையும் வழங்கியிருக்கிறோம். ஆனால் தற்போது மலேசியாவிலிருந்து படமெடுப்பதற்காக இந்தியாவிற்கு அதிலும் தமிழகத்திற்கு வருகைத் தந்திருக்கிறார்கள். மலேசிய நாட்டிலுள்ள கலைஞர்கள் தங்களின் திறமையை மலேசியாவிற்குள் மட்டுமே வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில், வினோத் போன்ற திறமையான கலைஞர்கள் இந்தியாவிற்கு வந்து தமிழ் மற்றும் ஆங்கில படத்தில் நடிப்பதை நான் வரவேற்கிறேன். இந்த படக்குழுவின் முயற்சியை மனதார பாராட்டுகிறேன். இதன் மூலம் மலேசியாவிலுள்ள கலைஞர்களின் திறமை உலகம் முழுவதும் பரவவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.”என்றார்.



தமிழில் நாயகனாக அறிமுகமாகும் நாயகன் வினோத் பேசுகையில், “நானும் சிவபக்தன். இயக்குநரும் சிவபக்தர். படமும் சிவனைப் பற்றி பேசுகிறது. நான் நடிக்கும் முதல் இந்திய தமிழ் திரைப்படம். இந்த டீசரின் வெற்றிக்கு இயக்குநர் குழுவின் ஒருங்கிணைந்த முயற்சியே காரணம்” என்றார்.

இந்த படத்தின் ஆங்கில பதிப்பில் நாயகியாக நடிக்கும் பிரியங்கா பேசுகையில், “மாயன் படம் தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் உருவாகிறது. ஆங்கில பதிப்பில் நான் தான் நாயகியாக நடிக்கிறேன். நான் தமிழ் பொண்ணு தான். இந்தியாவில் தயாராகும் ஆங்கில படத்தில் ஹீரோயினாக அறிமுகமாவதில் சந்தோஷமடைகிறேன். எனக்கு வாய்ப்பளித்த இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் அவர்களுக்கு நன்றி” என்றார்.

நடிகர் சௌந்தரராஜா பேசுகையில். “நான் இங்கு சிறப்பு விருந்தினராக வரவில்லை. படக்குழுவினரின் சகோதரராக வருகை தந்திருக்கிறேன். போஸ்டரை பார்த்தவுடன் சந்தோஷமடைந்து, படக்குழுவினரை வாழ்த்தினேன். இயக்குநர் ராஜேஷ் அவர்களை எனக்கு ஏற்கனவே பத்தாண்டுகளுக்கு முன்பேத் தெரியும். அவரது இயக்கத்தில் ஒரு படத்தை தயாரிக்க திட்டமிட்டிருந்தோம். இயக்குநர் ராஜேஷ் எப்போதும் ஒரு நேர்மறையான சிந்தனையாளர். படத்தின் டீசர் நன்றாக இருக்கிறது, வாழ்த்துகள்” என்றார்.

படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநருமான ராஜேஷ் கண்ணன் பேசுகையில்,“மாயன் என்றால் நாம் அனைவரும் மெக்சிகோவில் உள்ள மாயன் கலாச்சாரத்தையும், மாயன் காலண்டரையும் நினைத்துக் கொள்கிறோம். மாயன் என்று எடுத்துக் கொண்டால் மூவாயிரம் வருட வரலாறு கொண்டது. தமிழ் என்று எடுத்துக்கொண்டால் இருபத்தைந்தாயிரம் ஆண்டுகள் பழமைக் கொண்டது. ஆனால் சிவன் என்று எடுத்துக் கொண்டால் அதற்கு மேல் செல்கிறது. என்னைப் பொருத்தவரை சிவன் தான் மாயன்.

மாயன் ஒரு பேண்டசி. மாயன் ஒரு ரியாலிட்டி இதை வேறொரு கோணத்தில் சுவாரசியமாக சொல்வது தான் மாயன். சிவனை இந்த படத்தில் ஸ்டைலீஷாக காட்ட நினைத்தேன். அதனால் அதற்கு ஏற்ற வகையில் இருந்த வினோத்தை நாயகனாக்கியிருக்கிறேன்.” என்றார்.

Tags:    

Similar News