சினிமா

அமெரிக்க திரைப்பட விழாவில் காலா, பரியேறும் பெருமாள், கக்கூஸ்

Published On 2019-01-30 05:26 GMT   |   Update On 2019-01-30 05:26 GMT
அமெரிக்காவில் நடைபெறும் தலித் திரைப்படம் மற்றும் கலாச்சார திருவிழாவில் காலா, பரியேறும் பெருமாள் உள்ளிட்ட திரைப்படங்களும், கக்கூஸ் என்ற ஆவணப்படமும் திரையிடப்படுகிறது. #PariyerumPerumal #Kaala #Kakkoos
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் வரும் 23, 24-ந் தேதிகளில் முதலாவது ‘தலித் திரைப்படம் மற்றும் கலாச்சார திருவிழா 2019’ நடைபெற இருக்கிறது.

சர்வதேச அளவில் வெளியான தலித் சமூகம் சார்ந்த திரைப்படங்கள், ஆவணப்படங்களில் இருந்து முக்கியமான படங்கள் தேர்வு செய்யப்பட்டு இந்த விழாவில் திரையிடப்பட இருக்கிறது.

இதில் அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா ஆகிய தமிழ் படங்களை இயக்கிய பா.ரஞ்சித், சாய்ரத், ஃபான்றி படங்களை இயக்கிய மராத்தி இயக்குனர் நாகராஜ் மஞ்சுலே மற்றும் நடிகை நிஹாரிகா சிங் ஆகியோர் இந்தியாவில் இருந்து கவுரவிக்கப்படுகிறார்கள்.

தமிழில் வெளியான காலா, பரியேறும் பெருமாள் படங்களும், கக்கூஸ் ஆவணப்படமும் திரையிடப்பட இருக்கின்றன. மலையாளத்தில் இருந்து ‘பபிலியோ புத்தா’ திரைப்படம் இந்த திருவிழாவிற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில், ‘மாசான்’, ‘ஃபேண்ட்ரி’, ‘போலே இந்தியா ஜெய் பீம்‘ ஆகிய திரைப்படங்களும் இடம்பிடித்துள்ளன.

‘காலா’ திரைப்படத்தில் தலித்துகளுக்கான நிலம் சார்ந்த அரசியல் பேசப்பட்டது. பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் நெல்லை வட்டாரத்தில் சமூகத்தின் ஒரு அங்கமாகவே மாறிவிட்ட சாதிய அடக்குமுறை சார்ந்த காட்சிகள் அப்படியே முன்வைக்கப்பட்டன.



காலா படத்தை இயக்கிய ரஞ்சித் பரியேறும் பெருமாள் படத்தை தயாரித்து இருந்தார்.

இத்திரைப்படங்களுக்கு, ‘தலித் திரைப்படம் மற்றும் கலாச்சார திருவிழா 2019’ கவுரவம் வழங்கியுள்ளது. மலம் அள்ளும் தொழில் பற்றி திவ்யபாரதி இயக்கத்தில் ‘கக்கூஸ்’ தமிழ் ஆவணப்படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது.

‘வி ஹேவ் நாட் கம் ஹியர் டூ டை’, ‘தி பேட்டில் ஆப் பீமா கோரேகான்’ உள்ளிட்ட மேலும் பல ஆவணப்படங்களும் இங்கு திரையிடப்பட உள்ளன. இதுதான் முதலாவது ஆண்டு, ‘தலித் திரைப்படம் மற்றும் கலாச்சார திருவிழா’ ஆகும்.

இதே கொலம்பியா பல்கலைக்கழகத்தில் தான் சட்ட மேதை அம்பேத்கர், 1927-ம் ஆண்டு, பொருளாதாரத்தில் பி.எச்டி பட்டம் பெற்றார். 1952-ம் ஆண்டு, அம்பேத்கருக்கு இந்த பல்கலைக்கழகம் கவுரவ பட்டம் வழங்கி கவுரவித்தது. #PariyerumPerumal #Kaala #Kakkoos #USInternationalFilmFestival

Tags:    

Similar News