சினிமா

கத்தி பட கதை விவகாரம் - குறும்பட இயக்குநர் குடும்பத்துடன் உண்ணாவிரதம்

Published On 2018-10-31 06:57 GMT   |   Update On 2018-10-31 06:57 GMT
கத்தி பட கதை விவகாரத்தில் தனக்கு நியாயம் கிடைக்க வேண்டி குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள குறும்பட இயக்குநர் ராஜசேகர், சர்கார் படத்துக்கு தடை கேட்டுள்ளார். #KaththiStory #ARMurugadoss #Vijay
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. இந்த படம் தன்னுடைய கதையை காப்பி அடித்து எடுக்கப்பட்டு இருப்பதாக எழுத்தாளர் சங்கத்தில் வருண் ராஜேந்திரன் என்பவர் புகார் அளித்திருந்தாரர்.

புகாரை விசாரித்த எழுத்தாளர் சங்க நிர்வாகி டைரக்டர் பாக்யராஜும் அதனை உறுதி செய்ததால் வழக்கு ஐகோர்ட்டுக்கு சென்றது. கதைக்கருவை வருண் முதலில் பதிவு செய்திருந்ததை முருகதாஸ் ஒப்புக்கொள்ளவே வழக்கில் சமரசம் ஏற்பட்டு முடித்துக் கொண்டனர்.

சர்கார் பட பிரச்சினை தீர்ந்தாலும், கத்தி பட சர்ச்சை முருகதாசை தொடர்கிறது. குறும்பட டைரக்டர் ராஜசேகர், தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷாலிடம் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் டைரக்டர் முருகதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் உதவி டைரக்டர் வாய்ப்பு வேண்டுவோர் தங்களின் விவரங்களை அனுப்பலாம் என்று கடந்த 30.06.2013 அன்று குறிப்பிட்டிருந்தார்.



அவர் கேட்டுக்கொண்டதன் பேரில் எனது தாகபூமி குறும்பட விவரங்களை அனுப்பி வைத்தேன். அவரிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. பின்னர் நான் பலே, தாழ்ப்பாள் உள்ளிட்ட குறும்படங்களை இயக்கினேன். அதே நேரத்தில் தாகபூமி குறும்படத்தை படமாக இயக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வந்தேன்.

இந்நிலையில் தாகபூமி குறும்படத்தை திருடி எனது அனுமதியில்லாமல் கத்தி திரைப்படத்தை முருகதாஸ் எடுத்துவிட்டார். இதனால் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்த நான் படக்குழுவில் உள்ள தயாரிப்பாளர் உள்ளிட்ட அனைவரிடமும் நியாயம் கேட்டேன். பதில் எதுவும் வரவில்லை.

பிறகு எனது வக்கீல் மூலம் முருகதாஸ், விஜய், லைகா நிறுவனத்தின் தயாரிப்பாளர்களான சுபாஸ்கரன், கருணாமூர்த்தி ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட 5 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பி 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு கேட்கப்பட்டிருந்தது. லைகா நிறுவன தயாரிப்பாளர்களிடமிருந்து எனக்கு பதில் வந்தது.

ஆனால் முருகதாசிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. பின்பு காப்புரிமை சட்டத்தின்படி தஞ்சாவூர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அவ்வழக்கு 4 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதே வழக்கு தஞ்சாவூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இவ்வாறு நீதிமன்றத்திற்கும் வீட்டிற்கும் அலைந்து 4 ஆண்டுகளை இழந்திருக்கிறேன்.

எனது உழைப்பை திருடியது மட்டுமில்லாமல் மனரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தி மிகுந்த மன உளைச்சலுக்கு முருகதாஸ் என்னை ஆளாக்கியுள்ளார்.



எனவே எனது பக்கம் உள்ள நியாயத்தின் அடிப்படையில் எனக்கு நியாயம் கிடைக்கும் வரை சர்கார் திரைப்படத்தை வெளியிட தடை விதிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்’ என்று மனுவில் தெரிவித்துள்ளார்.

தனக்கான நியாயம் கிடைக்கும் வரை சர்கார் படத்துக்கு தடை விதிக்கக் கோரி தாயாரிப்பாளர் சங்க தலைவர் விஷாலிடம் அளித்துள்ள புகார் மனு அடிப்படையில் குற்றவியல் நடவடிக்கை எடுக்க கோரியும் முருகதாஸ் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் வள்ளுவர் கோட்டத்தில் குடும்பத்துடன் இன்று காலை 10 மணி முதல் 5 வரை உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார்.

கத்தி வெளியான சமயத்தில் டைரக்டர் மீஞ்சூர் கோபியும் இதே புகாரை கூறினார். அந்த வழக்கும் கோர்ட்டில் நடந்து வருகிறது. #KaththiStory #ARMurugadoss #Vijay #Rajasekar #HungerStrike

Tags:    

Similar News