சினிமா

அரசன் படத்தில் நடிக்காமல் இழுத்தடிப்பு - நடிகர் சிம்புவுக்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

Published On 2018-09-01 05:53 GMT   |   Update On 2018-09-01 05:53 GMT
‘அரசன்’ படத்தில் நடிக்காமல் இழுத்தடித்ததாக நடிகர் சிம்பு மீது தொடரப்பட்ட வழக்கில் நடிகர் சிம்பு ரூ.85 லட்சத்தை திருப்பி கொடுக்காவிட்டால் அவரது வீட்டில் உள்ள பொருட்களை ஜப்தி செய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ளார். #STR #Simbu
நடிகர் சிம்பு மீது சினிமா பட தயாரிப்பு நிறுவனமான பேஸ்சன் மூவி மேக்கர்ஸ் சென்னை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தது.

நடிகர் சிம்புவை கதாநாயகனாக வைத்து ‘அரசன்’ படத்தை தயாரிக்க திட்டமிட்டு இதற்காக அவருடன் ஒப்பந்தம் செய்து கொண்டோம். அவருக்கு ரூ.1 கோடி சம்பளம் பேசி முன் பணமாக ரூ.50 லட்சத்தை கடந்த 2013-ம் ஆண்டு ஜூன் மாதம் 17-ந் தேதி வழங்கப்பட்டது.

ஆனால் ஒப்பந்தப்படி நடிகர் சிம்பு ‘அரசன்’ படத்தில் நடிக்க முன்வராமல் இழுத்தடித்தார். அவர் சொன்னபடி நடித்து தராததால் படத்தயாரிப்பு நிறுவனத்துக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே அவரிடம் இருந்து பணத்தை திரும்ப பெற்றுத் தர கோர்ட்டு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு நீதிபதி மெ.கோவிந்தராஜ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களுக்கு பின்பு நடிகர் சிம்பு ‘அரசன்’ படத்தில் நடிக்க வாங்கிய அட்வான்ஸ் தொகை ரூ.50 லட்சத்தை ரூ.35.50 லட்சம் வட்டியுடன் சேர்த்து ரூ.85.50 லட்சம் திருப்பிச் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.



இந்த தொகையை 4 வாரத்தில் அவர் செலுத்த வேண்டும். இல்லையெனில் நடிகர் சிம்பு வீட்டில் உள்ள வீட்டு உபயோக பொருட்களான ரெப்ரிஜிரேட்டர், டி.வி., வாஷிங்மெஷின், கட்டில், ஷோபா செட், மின் விசிறிகள், கிரைண்டர், மிக்ஸி, ஏர்கண்டி‌ஷனர், டைனிங் டேபிள், சேர்கள் ஆகியவை ஜப்தி செய்யப்படும் என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.

மேலும் சிம்புவுக்கு சொந்தமான கார், மொபைல் போன்கள் ஆகியவற்றையும் ஜப்தி செய்யலாம் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

முன்னதாக சிம்பு தரப்பில் வாதிடுகையில், “குறிப்பிட்ட நேரத்தில் படப்பிடிப்பு தொடங்காததால் தனக்கு இழப்பு ஏற்பட்டதாகவும், இதனால் அட்வான்ஸ் தொகையை திருப்பித்தர இயலவில்லை என்றும் வாதாடப்பட்டது. அதை நீதிபதி ஏற்க மறுத்துவிட்டார். #STR #Simbu #Arasan

Tags:    

Similar News