சினிமா

கேரளாவில் வெள்ள நிவாரண முகாமில் குழந்தைகளை மகிழ்வித்த நடிகைகள்

Published On 2018-08-28 12:32 GMT   |   Update On 2018-08-28 12:32 GMT
கேரளாவில் தொடர்ந்து பெய்த கனமழையால் வீடுகளை இழந்து முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள குழந்தைகளை நடிகைகள் மகிழ்வித்துள்ளனர். #KeralaRain #KeralaFloods
கேரளாவில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பில் இருந்து மீள முடியாமல் அங்குள்ள மக்கள் தவித்து வருகிறார்கள். வெள்ள பாதிப்பின் போது 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் முகாமில் தங்கியிருந்தனர். மழை குறைந்ததை தொடர்ந்து முகாமில் தங்கியிருந்தவர்கள் வீடு திரும்பத் தொடங்கினர். ஆனால் வீடுகள் முழுமையாக இழந்தவர்கள் எங்கு செல்வது என தெரியாமல் தொடர்ந்து முகாமிலேயே தங்கியுள்ளனர்.

மாநிலம் உள்ள முகாம்களில் தற்போது ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் தங்கியிருக்கிறார்கள். இவர்களில் பெண்கள், குழந்தைகளும் அடங்குவர். 15 நாட்களுக்கும் மேலாக அவர்கள் முகாமிலேயே தங்கி பரிதவித்து வருகிறார்கள்.

அவர்களை அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள், தன்னார்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் சந்தித்து ஆறுதல் கூறி வருகிறார்கள். நிவாரண உதவிகளும் அவர்களுக்கு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

முகாம்களில் சோர்வுடன் இருக்கும் அவர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில் மலையாள நடிகைகள் ரம்யா நம்பீசன், ரீமா கல்லிங்கல், பார்வதி ஆகியோர் களமிறங்கினர். பத்தனம்திட்டாவில் உள்ள நிவாரண முகாமுக்கு சென்ற அவர்கள் அங்கிருந்த பெண்கள், குழந்தைகள் மத்தியில் அமர்ந்து பாடல்கள் பாடி அவர்களை மகிழ்வித்தனர்.

மேலும் அவர்களுடன் செல்பியும் எடுத்து நிவாரண உதவிகளையும் வழங்கினர். தங்களுடன் நடிகைகள் அமர்ந்து பாடுவதை கேட்ட குழந்தைகள், முகாம்களில் தங்கியிருக்கிறோம் என்பதையும் மறந்து கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

இதேபோல பிரபல பின்னணி பாடகி சித்ரா கோழிக்கோடு நிஷாகந்தி என்ற இடத்தில் உள்ள முகாமுக்கு சென்றார். அங்கிருந்த பெண்கள் மத்தியில் அமர்ந்து அவர் பாடல்களை பாடி மகிழ்வித்தார். பின்னர் நிவாரண பொருட்களையும் அவர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கேரள மந்திரி கடகம்பிள்ளை சுரேந்திரன், கலெக்டர் வாசுகி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News