சினிமா

என்னால் சாதாரண பெண்ணாக இருக்க முடியாது - அமலாபால்

Published On 2018-08-13 10:18 GMT   |   Update On 2018-08-13 10:18 GMT
தமிழ், மலையாள மொழிப்படங்களில் முன்னணி நடிகையாக இருக்கும் அமலாபால், என்னால் சாதாரண பெண்ணாக இருக்க முடியாது என்று கூறியிருக்கிறார். #Amalapaul
அமலா பால் திருமணமாகி விவாகரத்துக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ளார். பொதுவாக இப்படி நடிக்க வருபவர்களுக்கு கதாநாயகி வேடங்கள் கிடைக்காது. ஆனால் அமலாபால் தொடர்ந்து கதாநாயகியாக நடித்து வருகிறார். சில படங்களில் அம்மா வேடத்திலும் நடித்தார். 

இதுபற்றி அவர் கூறும்போது, ‘நடிகை என்றால் கவர்ச்சியாக மட்டும் இல்லாமல் எல்லா விதமான பாத்திரத்திலும் நடிக்க வேண்டும். அம்மாவாக நடிப்பதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. ஊடகங்கள்தான் தான் அதைப் பெரிது படுத்துகின்றன. கொச்சி, சென்னை இரண்டுமே எனக்கு தாய் வீடு மாதிரி. கொச்சி நான் பிறந்த ஊர். சென்னை நான் வேலை பார்க்கும் ஊர். கொச்சிக்கு போய் விட்டால் அம்மா செல்லமாகி விடுவேன். நன்றாக தூங்குவேன். சாப்பிடுவேன். உடற்பயிற்சி, யோகா எல்லாம் இருக்காது. 

ஆனால் சென்னைக்கு வந்தால் ‘ஏனோ தானோ’ என்று இருக்க முடியாது. இது வாழ்வு கொடுக்கும் இடம். அதனால் கொஞ்சம் பயபக்தியுடன் இருக்க வேண்டியிருக்கிறது. ஒன்பது வருடமாக சினிமாவில் இருக்கிறேன். எனக்கு சினிமாவைத் தவிர வேறு எதுவும் தெரியாது. முதல் முறையாக ஏதாவது தொழில் செய்யலாமே என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது. ஆயுர் வேத ஆரோக்கியம் தொடர்பான தொழிலில் கவனம் செலுத்தலாம் என முடிவு செய்து இருக்கிறேன். 



இதைத் தவிர்த்து நண்பர்களுடன் சேர்ந்து ஒரு சமூக அமைப்பை துவக்கியுள்ளளேன். அதன் மூலம் 100 பேருக்கு கண் அறுவை சிகிச்சைக்கு உதவிட திட்டம் ஒன்றும் இருக்கிறது. மற்றபடி தற்போது மனதில் தோன்றுவதை எல்லாம் கதையாக எழுதி வைத்திருக்கிறேன். ஆனால் ஒன்று மட்டும் உறுதி இந்த அமலா பாலினால் எல்லோரையும் போல ஒரு சாதாரண பெண்ணாக மட்டும் இருக்கவே முடியாது’ என்று கூறி இருக்கிறார்.
Tags:    

Similar News