சினிமா

படப்பிடிப்பின் போது நடிகர் கிருஷ்ணாவை சுற்றிவளைத்த அதிரடிப்படை

Published On 2018-07-17 06:00 GMT   |   Update On 2018-07-17 06:00 GMT
கிருஷ்ணா நடிப்பில் உருவாகி வரும் `கழுகு-2' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படப்பிடிப்பின் போது நடிகர் கிருஷ்ணாவை அதிரடிப்படையினர் சுற்றிவளைத்தனர். #Kazhugu2 #Krishna
சத்யசிவா இயக்கத்தில் கிருஷ்ணா - பிந்து மாதவி நடிப்பில் கழுகு-2 படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் கேரளாவில் துவங்கியது. அடர்ந்த காட்டுப் பகுதிகளில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் கிருஷ்ணாவை அதிரடிப்படையினர் சுற்றிவளைத்தனர்.

மேற்கு தொடர்ச்சி மலைக்காடுகளில் மாவோயிஸ்டுகளும், நக்சல்களும் ஆயுத பயிற்சி எடுப்பதும், அதிரடிப்படை அவர்களை சுற்றி வளைத்து கைது செய்வதும் அவ்வப்போது நடந்து வருகிறது.  

இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை காட்டுப்பகுதியான கேரள மாநிலம் மறையூரில் தனியாருக்கு சொந்தமான காட்டுப்பகுதியில் நடிகர் கிருஷ்ணா நடித்துவரும் `கழுகு-2' படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. தனியாருக்கு சொந்தமான இடத்தை சுற்றிலும் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள காடு உள்ளது. இந்த படத்தில் செந்நாய்களை கிருஷ்ணா வேட்டையாடும் காட்சி இடம் பெறுகிறது. 



ஆகாயத்தில் பறந்தவாறு செந்நாய்களை குறி தவறாமல் கிருஷ்ணா சுட வேண்டும். இதற்காக அடர்ந்த காட்டுப்பகுதியில் நடிகர் கிருஷ்ணா ஒரிஜினல் துப்பாக்கியை வைத்து துப்பாக்கி சுடும் பயிற்சியை எடுத்து கொண்டார். தொடர்ந்து துப்பாக்கி சத்தம் கேட்டதால் பீதியான மக்கள் மாவோயிஸ்டுகள் ஆயுத பயிற்சி மேற்கொள்வதாக தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அந்த பகுதிக்கு விரைந்த அதிரடிப் படையினர், துப்பாக்கி முனையில் நடிகர் கிரிஷ்ணாவையும், அவரது உதவியாளர்களையும் சுற்றி வளைத்தனர். 

அருகில் சென்று பார்த்த போது தான், அது திரைப்படத்திற்கான ஒத்திகை என்பது தெரிய வந்தது. இருப்பினும் துப்பாக்கியை ஆய்வு செய்த காவல்துறை, அது ஒரிஜினல் துப்பாக்கி என்றும், லைசென்சை காண்பித்து விட்டு துப்பாக்கியை பெற்று செல்லுமாறும் கூறியுள்ளனர். 

அண்டை மாநிலத்தின் முதல்வர் ஒருவரின் ஹெலிகாப்டர் அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் விழுந்து நொறுங்குகிறது. அதனை தேடிக் கண்டுபிடிக்க ராணுவத்துடன் அந்த ஊர் மக்களும் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபடுகின்றனர். இதனை மையப்படுத்தி படம் உருவாகி வருகிறது.  #Kazhugu2 #Krishna

Tags:    

Similar News