சினிமா

காவ்யா மாதவனை கைது செய்யாதது ஏன்? மலையாள பட தயாரிப்பாளர் கேள்வி

Published On 2017-08-31 11:54 IST   |   Update On 2017-08-31 11:55:00 IST
நடிகை கடத்தல் வழக்கில் காவ்யா மாதவனை கைது செய்யாதது ஏன்? என்று மலையாள பட தயாரிப்பாளர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
கேரளாவில் ஓடும் காரில் நடிகை கடத்தப்பட்டு பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டார்.

இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக ரவுடி பல்சர்சுனில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு ஆலுவா ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளார்.

மேலும் நடிகர் திலீப் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்களும் கேரள ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் நடிகர் திலீப்பின் 2-வது மனைவி நடிகை காவ்யா மாதவனுக்கும் தொடர்பு உண்டு என்ற புகார் எழுந்தது. இது தொடர்பாக காவ்யா மாதவனிடம் போலீசார் ஏற்கனவே விசாரணை நடத்தி உள்ளனர்.



இதைத்தொடர்ந்து காவ்யா மாதவன் கைது செய்யப்படலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டது. மேலும் நடிகை கடத்தல் வழக்கில் கைதாகி உள்ள பல்சர்சுனில் வேறு வழக்குகளுக்காக கோர்ட்டுக்கு வரும் போதெல்லாம் நடிகை கடத்தல் வழக்கில் ‘மேடம்‘ ஒருவருக்கு தொடர்பு உண்டு. அவர் யார் என்பதை விரைவில் வெளியிடுவேன் என்று கூறி வந்தார்.

இந்த நிலையில் நேற்று எர்ணாகுளம் கோர்ட்டில் பல்சர்சுனிலை போலீசார் ஆஜர்படுத்தி விட்டு அழைத்து வந்த போது பல்சர்சுனில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது, நான் கூறிய ‘மேடம்’ நடிகை காவ்யா மாதவன் தான் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

இதைத் தொடர்ந்து விரைவில் நடிகை காவ்யா மாதவனிடம் போலீசார் மீண்டும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளார்கள்.



பல்சர்சுனில் நடிகை காவ்யா மாதவன் மீது பரபரப்பு புகார் கூறி உள்ள நிலையில் பிரபல மலையாள சினிமா பட தயாரிப்பாளரும், தியேட்டர் அதிபர்கள் சங்க முன்னாள் தலைவருமான லிபர்ட்டி பஷீரும் காவ்யா மாதவனுக்கு நடிகை கடத்தல் வழக்கில் தொடர்பு உண்டு என்று கூறி உள்ளார்.

இது தொடர்பாக அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நடிகை கடத்தல் வழக்கில் காவ்யா மாதவனுக்கு தொடர்பு உண்டு என்பது எனக்கு ஏற்கனவே தெரியும். அரசு தரப்பு சார்பில் இந்த வழக்கில் அனைத்து சாட்சியங்களையும் ஏற்கனவே கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளது. அப்படி இருந்தும் இந்த வழக்கில் காவ்யா மாதவனை போலீசார் ஏன் இன்னும் கைது செய்யவில்லை என்பது தெரியவில்லை.



நடிகை கடத்தல் சம்பவத்தில் நடிகர் திலீப் சொன்னதையே நடிகை காவ்யா மாதவன் செய்துள்ளார் என்பதை ஏற்கனவே அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையின் போதே தெரிந்து கொண்டனர். ஆனாலும் காவ்யா மாதவனை இன்னும் கைது செய்யவில்லை.

இந்த சம்பவத்தில் காவ்யா மாதவனுக்கு நேரடி தொடர்பு இருந்து உள்ளது. திலீப் கைது சம்பவத்திற்கு நானும் ஒரு காரணம் என்று கூறுகிறார்கள். அது உண்மை அல்ல. போலீசார் தீவிர விசாரணை நடத்திய பிறகே நடிகர் திலீப்பை கைது செய்துள்ளனர்.

Similar News