சினிமா

கிரிக்கெட் படத்தில் கராத்தே வீராங்கனை

Published On 2016-10-30 16:25 IST   |   Update On 2016-10-30 16:25:00 IST
கிரிகெட்டை மையப்படுத்திய படத்தில் கராத்தே வீராங்கனை ஒருவர் நடித்துள்ளார். அது என்ன படம்? அந்த நடிகை யார்? என்பதை கீழே பார்ப்போம்..
சினிமாவின் ஆரம்ப காலத்தில் இருந்தே தமிழ் சினிமாவிற்கும் கேரளாவுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்து வருகிறது. தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாரா முதல் தற்போதைய மஞ்சிமா மோகன் வரை பல நடிகைகள் கேரளாவில் இருந்து வந்தவர்கள்தான்.

அந்த வரிசையில் தற்போது சனா அல்தாப் என்ற மலையாள நடிகை தமிழ் சினிமாவில் நடித்துள்ளார். இவர் வெங்கட் பிரபு இயக்கியுள்ள ‘சென்னை 28 II’ படத்தில் ஜெய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். 17-வயதே நிரம்பிய சனா அல்தாப், கராத்தேவில் பிளாக் பெல்ட் வாங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து சனா அல்தாப் கூறும்போது, என்னுடைய பொது தேர்வினால் நான் சில மாதங்கள்  நடிப்பில் இருந்து விலகி இருக்கும் சூழ்நிலை இருந்தது. அதன் காரணமாக என்னால் நடிப்பில் சரிவர கவனம் செலுத்த முடியவில்லை. ஆனால் வெங்கட் பிரபு சார் எனக்கு அளித்த தன்னம்பிக்கையும், ஊக்குவித்தலும், என்னை மீண்டும் நடிப்பில் களம் இறக்கியது.

இந்த படத்தில் ஜெய்க்கு ஜோடியாக நடிக்கும் என்னுடைய கதாபாத்திரத்தின் பெயர் அனுராதா. வெறும் கவர்ச்சி மூலம் படத்தை ஒப்பேற்றும் ஒரு சாதாரண கதாபாத்திரமாக இல்லாமல், கதை களத்தை மேற்கொண்டு நகர்த்தக்கூடிய வலுவான வேடமாக என்னுடைய கதாபாத்திரம் அமைந்திருப்பது எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சியாக இருக்கின்றது.

ஆரம்பத்தில் தமிழ் எனக்கு சிறிது கடினமாக இருந்தாலும், வெங்கட் பிரபு சார் எனக்கு கொடுத்த முறையான பயிற்சி அந்த கஷ்டத்தை  எளிதாகி விட்டது. கலைஞர்களுக்கு சிறந்த ஆசானாக திகழ்பவர் வெங்கட் பிரபு சார். தமிழ் திரையுலகில் முதல் முறையாக காலடி எடுத்து வைக்கும் எனக்கு, நிச்சயமாக ‘சென்னை - 28 - II’ திரைப்படம் சிறந்ததொரு அடித்தளமாக அமையும் என்றார்.

இப்படத்தை ‘பிளாக் டிக்கெட் கம்பெனி’ சார்பில் வெங்கட் பிரபு தயாரித்து, இயக்கி இருக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.

Similar News