சினிமா

ஐகோர்ட்டு விதித்த காலக்கெடு இன்றுடன் முடிவு: மதனை கைது செய்ய போலீசார் தீவிரம்

Published On 2016-09-21 08:04 IST   |   Update On 2016-09-21 08:05:00 IST
ஐகோர்ட்டு விதித்த காலக்கெடு இன்றுடன் முடிவதால் பட அதிபர் மதனை கைது செய்ய துணை கமிஷனர் ராதாகிருஷ்ணன் தலைமையில் 7 தனிப்படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
படஅதிபர் மதன் காணாமல் போன வழக்கையும், அவர் மீதான மோசடி வழக்கையும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகிறார்கள். மோசடி வழக்கில் எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழக வேந்தர் பாரிவேந்தர் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுதலையாகி உள்ளார்.

மேலும் ஏற்கனவே இந்த வழக்கில் விஜயபாண்டி, டாக்டர் பார்கவன் பச்சமுத்து, சண்முகம், பாபு என்ற சீனிவாச பாபு ஆகியோரும் கைது செய்யப்பட்டு ஜாமீனில் உள்ளனர். தொடர்ந்து தலைமறைவாக உள்ள பட அதிபர் மதனை கண்டுபிடிக்கும்படி, சென்னை ஐகோர்ட்டு காலக்கெடு விதித்துள்ளது.

அந்த காலக்கெடு இன்றுடன் (புதன்கிழமை) முடிவடைகிறது. இன்று ஐகோர்ட்டில் இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது, மதனை கைது செய்ய மேலும் காலஅவகாசம் கேட்க மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

மதனை கைது செய்ய, மத்திய குற்றப்பிரிவு கூடுதல் துணை கமிஷனர் ராதாகிருஷ்ணன் தலைமையில் 7 தனிப்படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மதன் கைது செய்யப்பட்டதாக நேற்று இரவு தகவல் வெளியானது. ஆனால் அவர் கைது செய்யப்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.

Similar News