சினிமா

இயக்குனராக களமிறங்கும் அரவிந்த் சாமி?

Published On 2016-04-25 13:29 IST   |   Update On 2016-04-25 13:29:00 IST
நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வரும் அரவிந்த் சாமி, தற்போது இயக்குனராகவும் களமிறங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
‘தளபதி’ படத்தில் அறிமுகமாகி, ‘ரோஜா’, ‘பம்பாய்’, ‘மின்சார கனவு’, ‘இந்திரா’ உள்ளிட்ட படங்களில் நடித்த அரவிந்த்சாமி, இடையில் சில வருடங்கள் சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்தார். பின்னர் ‘கடல்’ படத்தின் மூலம் மீண்டும் கோலிவுட்டுக்கு ரீ-என்ட்ரி ஆகி, ‘தனிஒருவன்’ படத்தின் மூலம் மீண்டும் பிரபலமானார். இந்த படத்தில் இவர் ஏற்று நடித்திருந்த வில்லன் கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்தது.

இந்நிலையில், தற்போது இவரைத் தேடி தமிழிலும், இந்தியிலும் வாய்ப்புகள் தேடி வந்தவண்ணம் உள்ளது. இருப்பினும், தொடர்ந்து வரும் வாய்ப்புகளை ஏற்றுக்கொள்ளாமல் அதில் நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வரிசையில் தற்போது ஜெயம் ரவியுடன் மீண்டும் இணைந்து ‘போகன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். ‘தனி ஒருவன்’ தெலுங்கு ரீமேக்கிலும் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் இந்தியில் ‘டியர் டாட்’ என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், இவருக்கு தற்போது இயக்குனராகும் ஆசை துளிர் விட்டிருக்கிறது. தான் இரண்டு கதைகள் உருவாக்கி வைத்திருப்பதாகவும், அவற்றில் ஒன்றை விரைவில் இயக்கவிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இப்படம் தமிழ் அல்லது இந்தி என ஏதாவது ஒரு மொழியில் படமாக்குவார் என்று தெரிய வருகிறது. 

Similar News