சினிமா
நடிகை சமந்தா

நான் பணத்துக்காக நடிக்கவில்லை: சமந்தா

Published On 2016-04-25 09:36 IST   |   Update On 2016-04-25 09:36:00 IST
தமிழில் முன்னணி நடிகையாக வளம் வரும் சமந்தா பணத்துக்காக எந்த படத்திலும் நான் நடிக்கவில்லை என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
சமந்தா தமிழ், தெலுங்கில் அதிக படங்கள் கைவசம் வைத்து ஓய்வில்லாமல் நடித்து வருகிறார். அவருடைய சம்பளமும் உயர்ந்து இருக்கிறது. ஒரு படத்துக்கு ரூ. 1.50 கோடி வரை வாங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் பணத்துக்காக நான் நடிக்கவில்லை என்று அவர் கூறி இருக்கிறார். இது குறித்து சமந்தா அளித்த பேட்டி வருமாறு:-

‘‘கதாநாயகிகள் மீது மக்கள் எப்போதும் ஒரு தவறான கணிப்பு வைத்து இருப்பதை அறிய முடிகிறது. அதாவது நடிகைகள் பணத்துக்காக மட்டுமே நடிக்கிறார்கள். சம்பளத்தில் மட்டுமே அவர்களின் முழுக் கவனமும் இருக்கும் என்றெல்லாம் பேசுகிறார்கள். ஒரு படத்துக்கு நடிகை எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் என்று அறிவதிலும் ஆர்வம் காட்டுகிறார்கள்.

இந்த கண்ணோட்டம் மாற வேண்டும். பணம் இருந்தால் எல்லா வசதிகளும் வந்து விடும். ஆனால் பணத்தால் சந்தோஷத்தை வாங்க முடியாது. சினிமாவில் நடித்தால் பணம் வரும் என்பது உண்மைதான். ஆனால் என்னை பொருத்தவரை நான் பணத்துக்காக மட்டும் நடிப்பது இல்லை. இப்போது என்னிடம் வசதியாக வாழ்வதற்கு தேவையான அளவு பணம் இருக்கிறது.

இதற்கு மேலும் பணம் சம்பாதிக்க வேண்டும், கட்டு கட்டாக பீரோவில் பணத்தை அடுக்கி வைக்க வேண்டும் என்ற பேராசை எனக்கு இல்லை. இந்த பச்சை நோட்டுக்கள் மீது எனக்கு எந்த காதலும் இல்லை. நடிப்புத் தொழில் பணத்தை மட்டுமே கொடுக்காமல் திருப்தியையும் கொடுக்க வேண்டும். அதில்தான் உண்மையான சந்தோஷம் இருக்கும்.

இந்த பணத்தால் எல்லாவற்றையும் சாதிக்க முடியாது. எனக்கு நல்ல கதாபாத்திரங்களில் நடிப்பதில் மட்டுமே சந்தோஷம் கிடைக்கிறது. பணத்தினால் அல்ல.’’

இவ்வாறு சமந்தா கூறினார்.

Similar News