சினிமா
நடிகை நமீதா

ஜெயலலிதா மீண்டும் முதல்-அமைச்சராக தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்வேன்: நமீதா

Published On 2016-04-25 08:54 IST   |   Update On 2016-04-25 08:54:00 IST
ஜெயலலிதா மீண்டும் முதல்-அமைச்சராக தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்வேன் என்று நடிகை நமீதா கூறியுள்ளார்.
திருச்சியில் நடந்த அ.தி.மு.க. தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் ஜெயலலிதா முன்னிலையில் நடிகை நமீதா அ.தி.மு.க.வில் இணைந்தார். அதன்பிறகு அவர் திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நடிகை நமீதா கூறியதாவது:-

அ.தி.மு.க.வில் சேர வேண்டும் என்ற எண்ணம் எனக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே இருந்தது. ஆனால் இப்போது அ.தி.மு.க.வில் இணைந்துள்ளதை நினைத்து சந்தோசப்படுகிறேன். முதல்-அமைச்சர் ஜெயலலிதா தமிழக மக்களுக்கு நிறைய நலத்திட்டங்களை தந்து இருக்கிறார்.

குறிப்பாக அம்மா உணவகம், பாலூட்டும் தாய்மார்களின் வசதிக்காக பஸ் நிலையங்களில் தனி அறை இப்படி பெண்களுக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து உள்ளார். இப்போது எனக்கு தேர்தலில் போட்டியிடும் எண்ணம் இல்லை. இந்த தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிபெற்று, முதல்-அமைச்சர் ஜெயலலிதா மீண்டும் தமிழகத்தின் முதல்-அமைச்சர் ஆக வேண்டும் என்பதே எனது ஆசை.

இதற்காக தமிழகம் முழுவதும் கண்டிப்பாக பிரசாரம் செய்ய உள்ளேன். பிரசாரத்தில் ஜெயலலிதா தமிழக மக்களுக்கு அளித்து வரும் நலத்திட்டங்கள் பற்றியும், பெண்களுக்கு செய்த எண்ணற்ற திட்டங்கள் பற்றியும் பிரசாரம் செய்வேன். எனது கலைப்பயணத்தையும், அரசியல் பயணத்தையும் ஒரேநேரத்தில் திறம்பட செய்ய முடியும் என நினைக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News