சினிமா

சிவகுமார் நடித்த தேசிய விருது பெற்ற படம் - மறுபக்கம்

Published On 2017-11-08 16:30 GMT   |   Update On 2017-11-08 16:31 GMT
சிவகுமார் நடித்த "மறுபக்கம்'' என்ற படத்துக்கு தேசிய விருது (தங்கத்தாமரை) கிடைத்தது.
சிவகுமார் நடித்த "மறுபக்கம்'' என்ற படத்துக்கு தேசிய விருது (தங்கத்தாமரை) கிடைத்தது.

எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி எழுதிய குறுநாவல் "உச்சி வெயில்.'' அதை, "மறுபக்கம்'' என்ற பெயரில் டைரக்டர் கே.எஸ்.சேதுமாதவன் படமாகத் தயாரித்தார்.

இந்தப் படத்துக்கு, "தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம்'' நிதி உதவி செய்தது. மொத்தம் ரூ.14 லட்சம் செலவில் இப்படம் தயாரிக்கப்பட்டது.

வேம்பு அய்யர் என்ற வேடத்தில் சிவகுமார் நடித்திருந்தார். அவருடன் ராதா நடித்தார். 1991-ல் வெளிவந்த இப்படத்துக்கு, அகில இந்திய ரீதியில், சிறந்த படம் என்பதற்கான தேசிய விருது (தங்கத்தாமரை) கிடைத்தது.

பிரபலமான மூத்த கலஞர்களுடன் சேர்ந்து நடிப்பதை 1974 முதல் சிவகுமார் தவிர்த்து வந்தார். கதாநாயகனாக நடிப்பதில் மட்டும் கவனம் செலுத்தினார்.

சிவாஜிகணேசன் நடிக்க, பாரதிராஜா இயக்கிய "பசும்பொன்'' படத்தில் நடிக்க, 1995-ல் அழைப்பு வந்தது. பாரதிராஜாவின் டைரக்ஷனில் நடிக்க வேண்டும் என்ற ஆவல், சிவகுமாருக்கு நீண்ட காலமாக இருந்தது.

எனவே, தனது "விரத''த்தை முடித்துக்கொண்டு, 21 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு சிவாஜியுடன் இணைந்து நடித்தார், சிவகுமார்.

"பசும்பொன்'' படத்தைப் பற்றி சிவகுமாரின் கருத்து:

"பாரதிராஜாவுடன் நான் பணியாற்றிய ஒரே படம் இது. செதுக்கிச் செதுக்கி, இழைத்து இழைத்து காட்சிகளைப் படமாக்கினார்.

எங்கோ ஓரிடத்தில் நடந்த தவறினால், ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற படம் தவறிவிட்டது. எனினும், பாரதிராஜாவின் மிகச்சிறந்த படைப்புகளில் பசும்பொன்னும் ஒன்று.

ராதிகாவின் கதாபாத்திரம் `மாஸ்டர் பீஸ்.' வயதுக்கு மீறிய கதாபாத்திரத்தில் வாழ்ந்து காட்டினார் அவர்.

திரைக்கதையை உருவாக்க சுமார் 6 முதல் 8 மாதங்கள் வரை உழைத்து, அதன்பின் அதை நண்பர்களிடம் படித்துக்காட்டி, அதை மேம்படுத்தி, அதற்குப் பிறகுதான் படப்பிடிப்புக்கு செல்வார், கதாசிரியர், இயக்குனர், தயாரிப்பாளரான நண்பர் எம்.பாஸ்கர்.

தீர்ப்புகள் திருத்தப்படலாம், பவுர்ணமி அலைகள், தண்டிக்கப்பட்ட நியாயங்கள் ஆகிய படங்கள் இவர் இயக்கத்தில் நான் நடித்தவை.''

இவ்வாறு சிவகுமார் கூறினார்.

சினிமாவில் தந்தையும், மகனும் ஒரே படத்தில் நடிப்பது விசேஷமானது.

இந்தி நடிகர் ராஜ்கபூரின் குடும்பத்தில் இப்படி நடந்துள்ளது. தமிழ்நாட்டில் சிவாஜிகணேசனும், அவர் மகன் பிரபுவும் சேர்ந்து நடித்துள்ளனர்.

22-9-2000-ல் வெளிவந்த "உயிரிலே கலந்தது'' என்ற படத்தில் சிவகுமாரும், சூர்யாவும் சேர்ந்து நடித்தனர். இதில் சூர்யாவுக்கு ஜோடி ஜோதிகா.

1997-ல் வெளிவந்த "காதலுக்கு மரியாதை'' படத்தில் இளம் நடிகர் விஜய்க்கு தந்தையாக நடித்தார், சிவகுமார்.

இந்தப்படத்தில், இந்து மதத்தைச்சேர்ந்த விஜய்யும், கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த ஷாலினியும் காதலிப்பார்கள். காதலுக்கு மதம் தடையாக இருந்தாலும், இருவரும் பெற்றோர் மீது கொண்ட பாசத்தின் காரணமாக, காதல் வெற்றி பெறும்.

இந்தப் படத்தில் நடித்தது பற்றி சிவகுமார் கூறியதாவது:-

"காதல் இயற்கையானது. தவிர்க்க முடியாதது. மனித இனம் தோன்றிய காலம் தொட்டு நிகழ்வது.

ஆனால், 25 வயது வரை பெற்று வளர்த்து ஆளாக்கி, வாழ்க்கையைக் கொடுத்த பெற்றோரை உதாசீனப்படுத்தி விட்டு புது உறவுடன் ஓடிப்போகலாமா? அது தவறு. போராடி, பெற்றோர் சம்மதத்தைப் பெற்று வாழ்க்கையில் ஒன்று சேருங்கள் என்ற உயர்ந்த படிப்பினையைச் சொன்ன படம் "காதலுக்கு மரியாதை.''

நானும், ஸ்ரீவித்யாவும் விஜய்க்கு பெற்றோர்களாக நடித்தோம்.

பாசில் உருவாக்கிய மிகச்சிறந்த படங்களில் இந்தப்படமும் ஒன்று.''

இவ்வாறு கூறினார், சிவகுமார்.

திரை உலக அனுபவங்கள் பற்றி அவர் மேலும் கூறியதாவது:-

"நான் நடித்த மொத்த படங்கள் 193.

152 தயாரிப்பாளர்களுடனும், 98 டைரக்டர்களுடனும் பணியாற்றியுள்ளேன். என்னுடன் நடித்த கதாநாயகிகள் 87 பேர்.

எனக்குப் பிறகு திரைப்படங்களில் அறிமுகமாகி, எனக்கு ஜோடியாக அதிகப்படங்களில் நடித்தவர்கள் லட்சுமி, ஜெயசித்ரா, ஸ்ரீபிரியா, சுஜாதா, சரிதா, அம்பிகா, ராதிகா ஆகியோர்.

மூன்று நான்கு படங்களில் இணையாக நடித்தவர்கள் ஸ்ரீவித்யா, ஜெயசுதா, ஸ்ரீதேவி, ராதா, சுஹாசினி ஆகியோர்.

கதாநாயகியாக வளர்ந்து கொண்டிருந்த கட்டத்தில் "கவிக்குயில்'', "சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு'', "மச்சானைப் பாத்தீங்களா'' என்ற மூன்று படங்களில் ஸ்ரீதேவி என்னுடன் இணைந்து நடித்தார். துரதிர்ஷ்டவசமாக மூன்றுமே வெற்றிபெறத் தவறிவிட்டன.

என்னுடன் அதிக படங்களில் கதாநாயகியாக நடித்தவர் லட்சுமி. மிகுந்த தைரியசாலி. சோதனைகளைச் சந்திக்க நேர்ந்தாலும், அவற்றால் துவண்டு விடாமல், தன் நடிப்பாற்றலைக் கொண்டு, வெற்றிகரமாக வாழ்ந்து காட்டுபவர். புத்தகம் படிக்கும் ஆர்வம் உள்ளவர்.

"சில நேரங்களில் சில மனிதர்கள்'' படத்தில் அவர் ஏற்ற வேடம், அவரது அன்றைய வயதுக்கும், அனுபவத்துக்கும் மீறிய ஒன்று. ரொம்பவும் `மெச்சூர்டாக' அந்தப் பாத்திரத்தில் நடித்து, "ஊர்வசி'' விருது வாங்கினார்.

தமிழ்த்திரை உலகுக்கு அறிமுகம் ஆகும்போதே சுஜாதாவின் தோற்றத்தில் `மெச்சூரிட்டி' இருந்தது. அதனால், குடும்பத் தலைவி, வக்கீல், டாக்டர், பழி வாங்கத் துடிக்கும் நடுத்தர வர்க்கத்துப்பெண்... என்று குணச்சித்திர வேடங்கள் அவருக்கு ரொம்பவும் கை கொடுத்தன. உணர்ச்சிகரமான கட்டங்களில், நீண்ட தமிழ் வசனங்களை சுத்தமான உச்சரிப்புடன் பொரிந்து தள்ளுவதில் வல்லவர்.

சரிதா ரொம்பவும் திறமை சாலியான நடிகை. அவருடைய கண்களே ஆயிரம் கதைகள் பேசும்.''

இவ்வாறு சிவகுமார் கூறினார்.
Tags:    

Similar News