சினிமா

இளங்கோவன் டைரக்டர் ஆனார்: சோமுவுடன் இணைந்து மஹாமாயாவை இயக்கினார்

Published On 2016-06-15 16:44 GMT   |   Update On 2016-06-15 16:45 GMT
கண்ணகிக்கு அற்புதமாக வசனம் எழுதிய இளங்கோவன், பின்னர் "மஹாமாயா''வுக்கு வசனம் எழுதியதுடன், ஜுபிடர் சோமுவுடன் இணைந்து அந்தப் படத்தை டைரக்ட் செய்தார்.

கண்ணகிக்கு அற்புதமாக வசனம் எழுதிய இளங்கோவன், பின்னர் "மஹாமாயா''வுக்கு வசனம் எழுதியதுடன், ஜுபிடர் சோமுவுடன் இணைந்து அந்தப் படத்தை டைரக்ட் செய்தார். ஜுபிடர் பிக்சர்ஸ் "கண்ணகி'' படத்தை அடுத்து தயாரித்த படம் "குபேரகுலேசா.'' குசேலர் கதை பலரும் அறிந்த ஒன்று.

கிருஷ்ணபரமாத்மாவாவும், குசேலரும் பள்ளித் தோழர்கள். கிருஷ்ணன், மகாவிஷ்ணுவின் அவதாரம். துவாரகையைத் தலைநகராகக் கொண்டு, அரசராகி விடுகிறார். குசேலரோ, 27 குழந்தைகளுடன் வறுமையில் உழல்கிறார். "உங்கள் பால்ய நண்பர் கிருஷ்ணனை சந்தித்து, ஏதாவது உதவி பெற்று வாருங்கள்'' என்று, குசேலரை துவாரகைக்கு அனுப்பி வைக்கிறார், அவர் மனைவி. வெறுங்கையுடன் போகக்கூடாது என்பதால், ஒரு சிறு பையில் அவல் கொடுத்து அனுப்புகிறார். பழமோ, வேறு பரிசுகளோ வாங்க அவர்களிடம் பணம் இல்லை.

குசேலரை அன்புடன் வரவேற்று உபசரிக்கிறார், கிருஷ்ணன். "அண்ணி ஏதாவது கொடுத்து அனுப்பி இருப்பாரே!'' என்று கிருஷ்ணன் கேட்க, அவலை எடுத்து நீட்டுகிறார், குசேலர். சிரித்துக்கொண்டே, ஒரு பிடி அவலை சாப்பிடுகிறார், கிருஷ்ணன். அவ்வளவுதான்! குசேலரின் குடிசை வீடு, பெரிய மாளிகை ஆகிவிடுகிறது! இன்னொரு பிடி அவலை கிருஷ்ணன் சாப்பிடுகிறார்.

குசேலர் வீட்டில் இருந்த மண்பாண்டங்கள், தங்கப் பாத்திரங்களாக மாறுகின்றன. வீடு நிறைய நகைகள் குவிகின்றன. மூன்றாவது பிடி அவலை கிருஷ்ணன் சாப்பிட போகும்போது, ருக்மணி தடுத்து விடுகிறாள். காரணம், அந்த மூன்றாவது பிடி அவலை சாப்பிட்டு விட்டால், குசேலர் பெரிய மாமன்னர் ஆகிவிடுவார் என்பது ருக்மணிக்கு தெரியும்! சில நாட்கள் கிருஷ்ணனின் விருந்தாளியாகத் தங்கியிருந்து விட்டு, சொந்த ஊருக்குத் திரும்புகிறார், குசேலர். கூச்சத்தின் காரணமாக, கிருஷ்ணனிடம் உதவி ஏதும் கேட்கவில்லை.

ஊர் வந்து சேர்ந்த குசேலர், தன் குடிசை வீடு பெரிய மாளிகையாக மாறி இருப்பதைப் பார்த்து திகைத்து நிற்கிறார். வீட்டுக்குள் நுழைந்தால் எங்கு பார்த்தாலும், தங்கப் பாத்திரங்கள், தங்க நகைகள், தங்கக்காசுகள்! முன்பு கந்தல் சேலை அணிந்திருந்த குசேலரின் மனைவி, பட்டு சேலை அணிந்து, விலை உயர்ந்த ஆபரணங்கள் ஜொலிக்க எதிரே வருகிறாள்! கிருஷ்ணனின் மகிமையைக் கண்டு ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறார், குசேலர்.

இதுதான், புராணத்தில் உள்ள குசேலர் கதை. இதை "பக்த குசேலா'' என்ற பெயரில் டைரக்டர் கே.சுப்பிரமணியம் ஏற்கனவே தயாரித்தார். குலேசராக பாபநாசம் சிவன் நடித்தார். குசேலரின் மனைவியாகவும், கிருஷ்ணனாகவும் எஸ்.டி.சுப்புலட்சுமி இரட்டை வேடத்தில் நடித்தார். தரித்திர குசேலர், குபேர குசேலராக ஆன பிறகு என்ன நடந்திருக்கும்ப இதுபற்றி கற்பனை செய்தார், எழுத்தாளர் பி.எஸ்.ராமையா. அளவுக்கு மீறி பணம் வந்த பிறகு குசேலர் சும்மா இருப்பாராப காயகல்பம் சாப்பிட்டு இளைஞர் ஆகிறார்.

டி.ஆர்.ராஜகுமாரியை காதலிக்கிறார்! அதனால் அவர் குடும்பத்தில் ஏற்படக்கூடிய குழப்பங்களையும், திருப்பங்களையும் வைத்து, பி.எஸ்.ராமையா எழுதிய கதைதான், "குபேர குசேலா.'' ஜுபிடர் சோமுவும், மொகிதீனும் தயாரித்த இப்படத்தில் குசேலராக பாபநாசம் சிவன் நடித்தார். காயகல்பம் சாப்பிட்டு இளைஞனாக மாறிய பிறகு, பி.யு.சின்னப்பா நடித்தார். கிருஷ்ணனாக நடித்தவர் பி.எஸ்.கோவிந்தன். (பிற்காலத்தில் "ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி''யின் கதாநாயகன்.) கதை-வசனத்தை பி.எஸ்.ராமையா எழுதினார். கண்ணகியை டைரக்ட் செய்த சோமு, ஆர்.எஸ்.மணி ஆகிய இருவரும், இந்தப் படத்தையும் இணைத்து டைரக்டர் செய்தனர். படம் 14-6-1943-ல் வெளியாயிற்று. இது வெற்றிப்படம் என்றாலும், "கண்ணகி'' போல மகத்தான வெற்றிப்படம் அல்ல. "கண்ணகி'' படத்தை "மகத்தான காவியம்'' என்று புகழ்ந்த பத்திரிகைகள், "குபேர குலேசா'' பற்றி மாறுபட்ட கருத்துக்களை வெளியிட்டன."படம் நன்றாக இருக்கிறது; பார்க்க விறுவிறுப்பாக இருக்கிறது'' என்று பொதுவாக கூறப்பட்டாலும், "குசேலர் கதை புராணத்தில் உள்ளது.

அவர் சிறந்த பக்திமான். அவர் காயகல்பம் சாப்பிட்டு விட்டு, இளைஞனாக மாறி பெண் பித்தன் போல் நடந்து கொள்வதாகக் கற்பனை செய்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது'' என்று, பல பத்திரிகைகள் கண்டித்திருந்தன. ஜுபிடரின் மூன்றாவது படம் "மஹா மாயா.'' ஹர்சர் காலத்து சரித்திர நிகழ்ச்சிகளை வைத்து, கற்பனை செய்யப்பட்ட கதை இது. இளங்கோவன் எழுதினார். கண்ணகியின் வெற்றி ஜோடியான பி.யு.சின்னப்பாவும், கண்ணாம்பாவும் மீண்டும் இப்படத்தில் இணைந்தனர். கண்ணகியில் மாதவியாக நடித்த எம்.எஸ்.சரோஜாவும் இதில் நடித்தார். படத்தை டி.ஆர்.ரகுநாத்தும், இளங்கோவனும் இணைந்து டைரக்ட் செய்தனர்.

பிற்காலத்தில் பிரபல டைரக்டராக புகழ் பெற்ற காசிலிங்கம் எடிட்டிங்கை கவனித்தார். எப்.நாகூர், கலை டைரக்டராகப் பணியாற்ற, மிகச்சிறந்த கேமராமேன் மார்க்ஸ் பார்ட்லே ஒளிப்பதிவு செய்தார். பாடல்களை சுந்தரவாத்தியாரும், கம்பதாசனும் எழுதினார்கள். இசை அமைப்பை எஸ்.வி.வெங்கட்ராமன் (பிற்காலத்தில் "மீரா'' படத்துக்கு இசை அமைத்தவர்) கவனித்தார்.

பெரும் எதிர்பார்ப்புடன் 16-10-1944-ல் (தீபாவளி) வெளிவந்த "மஹாமாயா'' எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. காரணம், "மஹாமாயா''வை "கண்ணகி''யுடன் ரசிகர்கள் ஒப்பிட்டுப் பார்த்ததுதான்! ("மஹாமாயா'' வெளிவந்த அதே தீபாவளி தினத்தில்தான், பாகவதரின் "ஹரிதாஸ்'' படமும் வெளிவந்து இமாலய வெற்றி பெற்றது.) தமிழ்த்திரை உலகில், சிறந்த வசனத்துக்கு முன்னோடி "இளங்கோவன்.''

இவருடைய இயற்பெயர் தணிகாசலம். "மணிக்கொடி'' இலக்கியப் பத்திரிகை மூலம் புதுமைப்பித்தன், பி.எஸ்.ராமையா போன்றவர்கள் புகழ் பெற்றபோது, இவரும் புகழ் பெற்றார். புதுமைப்பித்தனும், இளங்கோவனும் ஒரே காலக்கட்டத்தில் "தினமணி''யில் துணையாசிரியர்களாகப் பணியாற்றினர். 1931-ல் தமிழின் முதல் பேசும் படமான "காளிதாஸ்'' வெளிவந்தது. அப்போது, சமஸ்கிருத சொற்கள் அதிகம் கலந்த மணிப்பிரவாள நடையில், வசனங்கள் எழுதப்பட்டன. 1937-ல் எம்.கே.தியாகராஜபாகவதர் நடித்த "அம்பிகாபதி'' படத்துக்கு, இளங்கோவன் முதன் முதலாக வசனம் எழுதினார்.

இலக்கிய நயம் மிக்க வசனம், முதன் முதலாகத் தமிழ்த்திரையில் ஒலித்தது. அதுமுதல், "சிறந்த வசனம் என்றால் இளங்கோவன்'' என்று பெயர் பெற்றார்."திருநீலகண்டர்'', "அசோக்குமார்'', "சிவகவி'' ஆகிய படங்களுக்கு சிறந்த முறையில் வசனம் எழுதிய இளங்கோவன், 1942-ல் "கண்ணகி'' படத்துக்கு வசனம் எழுதினார். இளங்கோவனின் அற்புத வசனங்களை சின்னப்பாவும், கண்ணாம்பாவும் பேசியபோது, ரசிகர்கள் மெய் சிலிர்த்தனர். குறிப்பாக, பாண்டியனின் அவையில், தன் கணவன் கள்வன் அல்ல என்று நிரூபிக்க கண்ணாம்பா பேசியபோது, இளங்கோவனின் வசனங்கள் சிகரத்தைத் தொட்டன.

பிறகு மஹாமாயா, ஹரிதாஸ், சுதர்சன் போன்ற படங்களுக்கு இளங்கோவன் வசனம் எழுதினார். பிற்காலத்தில், எம்.ஜி.ஆர். நடித்த "சக்கரவர்த்தி திருமகள்'' படத்துக்கு வசனம் எழுதினார். வசனத்தில் மன்னனாக விளங்கிய இளங்கோவன், இறுதிக்காலத்தில் பொருளாதார ரீதியில் சிரமப்பட்டார். இளங்கோவனின் வசனங்களை பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோர் பாராட்டியுள்ளனர். "கண்ணகி''க்கு இளங்கோவன் எழுதிய வசனம், என்றென்றும் சிரஞ்சீவியாக வாழும்.

Similar News