கியாவின் பழைய கேரன்ஸ், புதிய கிளாவிஸ் என்ன வித்தியாசம்...?
- 1.5 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷனை பெற முடியும்.
- என்ஜின் அதிகபட்சமாக 113.4 பி.எச்.பி. மற்றும் 143.8 என்.எம். டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.
கியா நிறுவனத்தின் எம்.பி.வி. வாகனமான கேரன்ஸ், இப்போது கேரன்ஸ் 'கிளாவிஸ்' ஆக அப்டேட் ஆகி சந்தைக்கு வந்திருக்கிறது.
இரு கார்களும் ஒரே மாதிரியாக இருந்தாலும், தோற்றத்தில் நிறைய வித்தியாசங்களை பார்க்க முடிகிறது.
இதன் ஆரம்ப ஷோரூம் விலையாக ரூ.12 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சரி, பழைய கேரன்ஸிற்கும், புதிய கிளாவிஸிற்குமான வித்தியாசங்களை அறிந்து கொள்வோம்.
* கிளாவிஸ் அம்சங்கள்
புதிய கேரன்ஸ் கிளாவிஸ் காரின் முன்பக்கத்தில் 3-விளக்குகளை உள்ளடக்கிய ஹெட்லைட் சிஸ்டம், அதற்கு பக்கத்தில் எல்-வடிவில் எல்.இ.டி. டி.ஆர்.எல் போன்றவை உள்ளன. முன்பக்க மற்றும் பின்பக்க பம்பர்கள் இரண்டும் முன்பை காட்டிலும் கூடுதல் வளைவாக, சில்வர் நிறத்தில் பாக்ஸ் பேஷ் தட்டுகள் பொருத்தப்பட்டுள்ளன. புதிய டிசைனில் 17 அங்குல டைமண்ட் கட் அலாய் சக்கரங்கள், மேற்கூரையில் ரூப் ரெயில்கள், பின்பக்கத்தில் எல்.இ.டி. டெயில் லைட்களை இணைக்கக்கூடிய லைட்பார் ஆகியவை புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.
10.25 அங்குல தொடுதிரை, ஓட்டுனருக்கான தகவல்களை வழங்கக்கூடிய 10.25 அங்குல திரை என இரண்டும் ஒன்றாக ஒரே திரையாக 22.62 அங்குலத்தில் வழங்கப்பட்டுள்ளது. புதிய வடிவமைப்பிலான ஸ்டீயரிங் சக்கரம், பெரிய பனோரமிக் சன்ரூப், 360 டிகிரி கேமரா, கியா கனெக்டட் தொழில்நுட்பம், லெவல்-2 அடாஸ் பாதுகாப்பு, 4 சக்கரங்களில் டிஸ்க் பிரேக், 6 ஏர்பேக்குகள், ஸ்டெபிலிட்டி மேனேஜ்மெண்ட், பிரேக் கண்ட்ரோல், இ.எஸ்.சி., ஏ.பி.எஸ். போன்ற பல்வேறு அம்சங்கள் கேரன்ஸ் கிளாவிஸை சிறப்பானதாக காட்டுகிறது.
* இயந்திர நுட்பங்கள்
கியா கேரன்ஸ் காரில் வழங்கப்பட்டு வரும் அதே மூன்று என்ஜின் மற்றும் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள்தான் அப்படியே கேரன்ஸ் கிளா விஸ் காரிலும் இடம் பெற்றுள்ளன. 1.5 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷனை பெற முடியும். இந்த என்ஜின் அதிகபட்சமாக 113.4 பி.எச்.பி. மற்றும் 143.8 என்.எம். டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இது இல்லாமல், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனிலும் கேரன்ஸ் கிளாவிஸ் கிடைக்கும். கூடுதலாக டீசல் என்ஜின் உடன் இந்த காரை வாங்க விரும்புபவர்களுக்காக 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷனும் இந்த காரில் வழங்கப்படுகிறது.