null
லிட்டருக்கு 25 கி.மீ. மைலேஜ்... முற்றிலும் புதிய கேம்ரி-யை அறிமுகம் செய்த டொயோட்டா
- புதிய மேட் பிளாக் வேரியண்ட் அலாய் வீல்களை கொண்டுள்ளது.
- புதிய மாடல் கேம்ரி சீரிசில் ஸ்போர்ட் தோற்றம் கொண்ட வேரியண்ட்டை இணைக்கிறது.
டொயோட்டா நிறுவனம் இந்திய சந்தையில் புதிய கேம்ரி ஸ்பிரிண்ட் மாடலை அறிமுகம் செய்துள்ளது. புதிய கேம்ரி மாடலின் விலை ரூ. 48.50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய மாடல் கேம்ரி சீரிசில் ஸ்போர்ட் தோற்றம் கொண்ட வேரியண்ட்டை இணைக்கிறது. அதே நேரத்தில் அதன் செயல்திறன் சார்ந்த அம்சங்களைத் தக்க வைத்துக் கொள்கிறது.
வெளிப்புறமாக, இந்த மாடலின் போனெட், ரூஃப் மற்றும் பூட் மூடியில் மேட் பிளாக் ஃபினிஷ் செய்யப்பட்டு டூயல் டோன் ஸ்டைலிங் கொண்டிருக்கிறது. புதிய மேட் பிளாக் வேரியண்ட் அலாய் வீல்களை கொண்டுள்ளது. இது முன் மற்றும் பின்புற பாடி கிட்களைச் சேர்க்கும் பிரத்யேக ஸ்போர்ட்ஸ் கிட் மற்றும் பின்புற ஸ்பாய்லருடன் வருகிறது.
ஸ்பிரிண்ட் மாடல் மேட் பிளாக் உடன் எமோஷனல் ரெட் மற்றும் மேட் பிளாக் உடன் பிளாட்டினம் ஒயிட் பியர்ல் உள்ளிட்ட ஐந்து டூயல்-டோன் நிற ஆப்ஷன்களில் வழங்கப்படுகிறது. இந்த செடான் காற்றோட்டமான முன் இருக்கைகள், 10-வழிகளில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஓட்டுநர் இருக்கை, பேடில் ஷிஃப்டர்கள், வயர்லெஸ் சார்ஜர், ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
பாதுகாப்பு அம்சங்களில் ஒன்பது ஏர்பேக்குகள், 360-டிகிரி கேமரா, டைனமிக் ரேடார் குரூயிஸ் கண்ட்ரோல், லேன் டிரேசிங் அசிஸ்ட் மற்றும் TPMS ஆகியவை அடங்கும். புதிய வேரியண்ட் தற்போதுள்ள 2.5 லிட்டர் பெட்ரோல்-ஹைப்ரிட் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. இது e-CVT அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. ஹைப்ரிட் சிஸ்டம் 230 ஹெச்பி பவர் மற்றும் லிட்டருக்கு 25.49 கிலோமீட்டர்கள் மைலேஜ் வழங்குகிறது.
புதிய டொயோட்டா கேம்ரி ஸ்பிரிண்ட் வேரியண்டிற்கான முன்பதிவுகள் டொயோட்டா அதிகாரப்பூர்வ வலைதளம் மற்றும் நாடு தழுவிய டீலர்ஷிப்களில் நடைபெறுகின்றன.