கார்களின் விலைகளை உயர்த்துகிறோம் - குண்டை தூக்கிப் போட்ட மெர்சிடிஸ் பென்ஸ்
- விலை உயர்வு இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- விலை உயர்வானது, ரூ.90,000 முதல் ரூ.12.2 லட்சம் வரை இருக்கும்.
மெர்சிடிஸ் பென்ஸ் கார் அனைவரையும் ஈர்க்கும் டிசைன் கொண்டது. இந்த நிறுவனத்தின் மாடலை பயன்படுத்த பெரும்பாலானோர் ஆர்வம் கொள்வர்.
இந்த நிலையில், மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனம் சில மாடல்களின் விலையை உயர்த்துவதாக அறிவித்தள்ளது. இந்த விலை உயர்வு இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 1-ந்தேதி முதல் கட்டமாகவும், செப்டம்பர் 1-ந்தேதி இரண்டாவது கட்டமாகவும் விலை உயர்வானது அமல்படுத்தப்பட உள்ளது.
ஜூன் 1-ந்தேதி முதல் சி-கிளாஸ், இ-கிளாஸ், ஜிஎல்சி, ஜிஎல்இ, ஜிஎல்எஸ், ஈக்யூஎஸ் மற்றும் மேபேக் எஸ்-கிளாஸ் போன்ற கார் மாடல்களின் விலை உயர்த்தப்பட்டுகிறது. அதன்படி விலை உயர்வானது, ரூ.90,000 முதல் ரூ.12.2 லட்சம் வரை இருக்கும். இதைத் தொடர்ந்து, செப்டம்பர் 1-ந்தேதி முதல் அமலுக்கு வரும் இரண்டாம் கட்ட விலை உயர்வானது முதல் ஜெர்மன் வாகன உற்பத்தியாளரின் முழு மாடல் வரிசையையும் உள்ளடக்கும். வாகனங்களின் விலையில் 1.5 சதவீதம் வரை மாற்றங்களைக் கொண்டுவரும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இரண்டு கட்டங்களான விலை உயர்வானது வாடிக்கையாளர்களின் திட்டமிடலுக்கு அதிக நேரத்தை வழங்கும் என்று கூறப்படுகிறது.
விலை உயர்வு குறித்து மெர்சிடிஸ் நிறுவனம் கூறுகையில், சமீபத்திய விலை உயர்வுக்குக் கடந்த நான்கு மாதங்களில் யூரோவிற்கு எதிராக இந்திய ரூபாயின் அந்நியச் செலாவணி மதிப்பு கிட்டத்தட்ட 10 சதவீதம் சரிந்ததே காரணம் என கூறியுள்ளது.
மெர்சிடிஸ் பென்ஸைத் தவிர, ஆடி இந்தியாவும் அதன் வாகனங்களின் விலைகளை 2 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வானது வருகிற 15-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.