கார்

இந்திய விற்பனையில் புது மைல்கல் எட்டிய கியா இந்தியா

Published On 2022-07-20 05:07 GMT   |   Update On 2022-07-20 05:07 GMT
  • கியா இந்தியா நிறுவனம் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தான் இந்திய சந்தையில் தனது முதல் வாகனத்தை அறிமுகம் செய்தது.
  • தற்போது இந்நிறுவனம் விற்பனையில் புது மைல்கல் எட்டியதாக அறிவித்து இருக்கிறது.

கியா இந்தியா நிறுவனம் இந்திய சந்தையில் ஐந்து லட்சம் கார்களை விற்று புது மைல்கல் எட்டியுள்ளது. 2020 மற்றும் 2021 ஆண்டுகளில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் பெருந்தொற்று காலக்கட்டத்திலும் இந்த மைல்கல் எட்டி இருப்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும். இந்திய சந்தையில் வலுவான இடத்தை பிடிக்க கியா நிறுவனம் தற்போது மஹிந்திராவுக்கு போட்டியாளராக உள்ளது.

2017 வாக்கில் இந்திய எண்ட்ரியை அறிவித்த கியா இந்தியா ஜனவரி 2019 முதல் உற்பத்திக்கான டிரையல் பணிகளை துவங்கியது. இதற்காக ஆந்திர பிரதேச மாநிலத்தின் அனந்தபூர் பகுதியில் 536 ஏக்கர் பரப்பளவில் நிலத்தை கையகப்படுத்தியது. தற்போது கியா நிறுவனம் ஆண்டுக்கு மூன்று லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டு இருக்கிறது. மேலும் வாகனங்களுக்கான தட்டுப்பாடு அதிகரித்து வருவதை அடுத்து, உற்பத்தியை விரிவுப்படுத்தவும் கியா நிறுவனம் முடிவு செய்து உள்ளது.


தற்போது கியா நிறுவனத்தின் குறைந்த விலை மாடலாக கியா சொனெட் இருந்து வருகிறது. எனினும், இந்நிறுவனம் முதலில் அறிமுகம் செய்த கியா செல்டோஸ் மாடலின் வெற்றி இந்திய சந்தையில் அந்நிறுவனம் தடம் பதிக்க உதவியது. செல்டோஸ் மாடல் ஏராளமான அம்சங்கள், அசத்தல் பவர்டிரெயின் ஆப்ஷன்களை சரியான விலையில் விற்பனைக்கு வந்தது. இதன் காரணமாக அமோக வரவேற்பை பெற்றது.

2020 ஆண்டு கியா நிறுவனம் கார்னிவல் எம்பிவி மற்றும் கியா சொனெட் சப்-4 மீட்டர் எஸ்யுவி மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. கியா சொனெட் மாடல் அந்நிறுவன விற்பனையை மேலும் வலுப்படுத்தியது. ஆரம்பத்தில் கியா செல்டோஸ், அதன் பின் சொனெட் என அந்நிறுவன மாடல்கள் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. இந்த நிலையில், தான் புதிதாக கியா கரென்ஸ் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.

கியா கரென்ஸ் பெற்ற வெற்றியை கொண்டு முன்னணி ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களான மஹிந்திரா மற்றும் டாடா மோட்டார்ஸ் உடன் கியா இந்தியா போட்டியை ஏற்படுத்துகிறது.

Tags:    

Similar News