தீபாவளி சீசன் எதிரொலி... கார் விற்பனையில் புது உச்சம்... உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி..!
- மாருதி சுசுகி நிறுவனம் பண்டிகை காலத்தில் 4,50,000 முன்பதிவுகளை பெற்றுள்ளது.
- டாடா மோட்டர்ஸ் ஒரு லட்சம் வாகனங்களை டெலிவரி செய்துள்ளதாகவும், இது கடந்த ஆண்டை விட 33 சதவீதம் அதிகம் என்றும் தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் 22ஆம் தேதி அமலுக்கு வந்த ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் காரணமாக இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் பண்டிகை காலத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக விற்பனையை பதிவு செய்துள்ளனர்.
நவராத்திரி முதல் தீபாவளி வரையிலான பண்டிகை காலத்தில் பயணிகள்-வாகன தயாரிப்பாளர்கள் 15 சதவீதம் முதல் 35 சதவீதம் வரை விற்பனை வளர்ச்சியைக் கண்டுள்ளனர்.
மாருதி சுசுகி நிறுவனம் பண்டிகை காலத்தில் 4,50,000 முன்பதிவுகளை பெற்றுள்ளது. மேலும் சில்லறை விற்பனை 3,25,000 யூனிட்களை தொட்டுள்ளது. டாடா மோட்டர்ஸ் ஒரு லட்சம் வாகனங்களை டெலிவரி செய்துள்ளதாகவும், இது கடந்த ஆண்டை விட 33 சதவீதம் அதிகம் என்றும் தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில் ஹூண்டாய் மோட்டார் இந்தியாவின் சில்லறை விற்பனை வருடாந்திர அடிப்படையில் (YoY) 30 சதவீதம் உயர்ந்து, ஒரு நாளைக்கு சராசரியாக 2,500 கார்களை விற்பனை செய்துள்ளது.
செப்டம்பர் 22 ஆம் தேதி அமலான ஜிஎஸ்டி சீர்திருத்தங்களுக்குப் பிறகு விற்பனை அதிகரிக்கத் தொடங்கியதால், கடந்த 50 நாட்களில் இந்த துறை சராசரி விற்பனையைக் கண்டுள்ளதாக ஆட்டோமோடிவ் திறன் மேம்பாட்டு கவுன்சில் தலைவரும், முன்னாள் ஃபாடா தலைவருமான வின்கேஷ் குலாட்டி தெரிவித்தார்.