ஆட்டோ டிப்ஸ்

பழைய கார் வாங்க போறீங்களா? இதை கவனிக்க மறக்காதீங்க...!

Published On 2023-06-26 07:09 GMT   |   Update On 2023-06-26 07:09 GMT
  • இந்திய சந்தையில் பயன்படுத்திய கார் மாடல்கள் விற்பனை அதிகரித்து வருகிறது.
  • பயன்படுத்திய கார் வாங்கும் போது பல்வேறு விஷயங்களில் விழிப்பாக இருப்பது அவசியம் ஆகும்.

புதிய கார் வாங்க வங்கிகள் ஏராளமான நிதி சலுகைகளை வழங்கி வருகின்றன. என்ற போதிலும், புதிய கார் வாங்குவதற்கான பட்ஜெட் சற்று அதிகம் ஆகும். இது அனைவருக்கும் ஏற்றதாக இருக்காது. இதை எதிர்கொள்ளவே பலரும் பயன்படுத்திய கார் மாடல் வாங்குகின்றனர். இந்தியாவிலும் பயன்படுத்தப்பட்ட கார் மாடல்கள் விற்பனை அதிகரிக்க துவங்கி இருக்கிறது.

ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட கார் மாடலை வாங்குவது அத்தனை எளிதான காரியம் இல்லை. நீங்கள் வாங்கும் பயன்படுத்தப்பட்ட காரில் தீர்க்க முடியாத அல்லது அடிக்கடி பிரச்சினை தரக்கூடிய கோளாறு இருக்க அதிக வாய்ப்புகள் உண்டு. மேலும் அந்த கார் விபத்தில் சிக்கிய ஒன்றாகவும் இருக்கலாம். அந்த வகையில், காரை செகன்ட் ஹேன்ட்-ஆக வாங்கும்போது கவனிக்க வேண்டியவற்றை தொடர்ந்து பார்ப்போம்.

 

கவனம் அவசியம்:

விலையை கேட்கும் போது கவர்ச்சிகரமான ஒன்றாக தெரிந்தாலும், பிரீமியம் கார்கள் மற்றும் எஸ்யுவிக்களை வாங்கினால், அவற்றை பராமரிப்பதற்கான செலவீனங்கள் அதிகரிக்கும். இதனால் உங்களின் தேவைக்கு பட்ஜெட்டில் பார்ப்பதை விட, பயன்பாட்டுக்கு தேவையான கார் மாடலை தேர்வு செய்வது நல்லது.

காரின் நிலை:

காரை தேர்வு செய்த பிறகு, அதனை முழுமையாக சரிபார்க்க வேண்டியது அவசியம் ஆகும். உங்களுக்கு கார்களை பற்றிய தொழில்நுட்ப விவரங்கள் தெரியாத பட்சத்தில், அந்த விஷயத்தில் விவரம் அறிந்தவர்கள் உதவியை நாடுவது நல்லது. கார் வாங்கும் முன் அதன் நிலை எப்படி இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

இதில் காரின் ஒட்டுமொத்த தோற்றம், அதன் இன்டீரியர் பாகங்கள், டயரின் நிலை உள்ளிட்டவைகளை முழுமையாக சரிபார்க்க வேண்டியது அவசியம் ஆகும்.

 

டெஸ்ட் டிரைவ்:

கார்கள் பெரும்பாலும் தோற்றத்தில் மிகவும் அழகாக காட்சியளிக்கும். ஆனால், ஓட்டும் போது தான் அவற்றின் உண்மையான நிலை நமக்கு தெரியவரும். அந்த வகையில், காரை வாங்கும் முன் அதனை டெஸ்ட் டிரைவ் செய்வது நல்லது. டெஸ்ட் டிரைவ் முடித்த பிறகு, கார் நிலை பற்றி ஏதேனும் சந்தேகம் இருந்தாலோ அல்லது, ஏதேனும் கோளாறு இருக்குமோ என்ற எண்ணம் எழுந்தால், அதனை வாங்காமல் தவிர்த்து விடுவது நல்லது.

பராமரிப்பு வரலாறு:

கார் நல்ல நிலையில், இருப்பதை உறுதிப்படுத்திய பிறகு காரை ஓட்டுவதற்கு உங்களுக்கு பிடித்திருந்தால், இந்த விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் ஆகும். கார் பயன்படுத்தும் அனைவரும் அதன் பராமரிப்பு விஷயங்களை தகவல்களாக வைத்திருப்பது இல்லை. ஆனால் ஒருசிலர் இவ்வாறு செய்யும் வழக்கம் கொண்டுள்ளனர். இதனால், கார் பராமரிப்பு எத்தனை கால அளவில் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது என்பதை சரிபார்ப்பது நல்லது.

 

தரவுகள்:

மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் விவரங்கள் அனைத்தும் சரியாக இருப்பின், கடைசியாக காருக்கான பதிவு சான்று, காப்பீடு போன்ற தரவுகள் சரியாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இதோடு காரை வாங்கியதும் பதிவு சான்றில் உங்களின் பெயரை இணைத்துக் கொள்ள வேண்டியது அவசியம் ஆகும்.

Tags:    

Similar News