நெக்சான் EV சார்ஜரை தட்டித்தூக்கிய மாடு
- டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் முன்னணி எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளராக உள்ளது.
- சமீபத்தில் டாடா நிறுவனத்தின் டியாகோ எலெக்ட்ரிக் வெர்ஷன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தொடர்ந்து முன்னணி இடத்தில் உள்ளது. டாடா நெக்சான் EV சீரிஸ் இந்திய சந்தையில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இதுதவிர டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டாடா டிகோர் EV, டியாகோ EV மாடல்களை இந்திய சந்தையில் விற்பனை செய்து வருகிறது.
டாடா நெக்சான் EV மாடலில் 30.2 கிலோவாட் ஹவர் மற்றும் நெக்சான் EV மேக்ஸ் மாடலில் 40.5 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. டாடா நெக்சான் EV மாடலில் DC ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் AC சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. இவை காருக்கு அசத்தலான சார்ஜிங் வசதியை வழங்கி வருகின்றன. எனினும், காரின் அருகில் மாடு வரும் போது சிக்கல் ஏற்படுகிறது.
நெக்சான் EV காரை வைத்திருக்கும் பயனர் ஒருவர் காரின் அருகில் வந்த மாடு காரை உரசியதால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். சுமித் என்ற நபர் சார்ஜ் ஏறிக் கொண்டிருந்த தனது நெக்சானை மாடு உரசியதை அடுத்து என்ன ஆனது என்பதை டுவிட்டரில் தெரிவித்து இருக்கிறார். டுவிட்டர் பதிவில் புகைப்பட ஆதாரத்தையும் அவர் இணைத்து இருக்கிறார்.
அதன்படி நெக்சான் EV காரை மாடு உரசியதால் அதன் சார்ஜர் முழுமையாக சேதமடைந்து விட்டதாக சுமித் தெரிவித்து இருக்கிறார். கார் சார்ஜ் ஏறிக் கொண்டிருந்த சமயத்தில் மாடு அருகில் வந்ததால் சார்ஜர் முழுமையாக உடைந்து இருக்கிறது. இந்த சம்பவத்தை அடுத்து கார் உற்பத்தியாளர்கள் கார் மட்டுமின்றி அதன் சார்ஜரை உற்பத்தி செய்வதிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
சுமித் டுவிட்டர் பதிவுக்கு பதில் அளித்த டாடா மோட்டார்ஸ், கார் சேதமடைந்த விவரங்களை குறுந்தகவல் மூலம் தெரியப்படுத்த வலியுறுத்தி இருக்கிறது. எனினும், இந்த பிரச்சினை சரி செய்யப்பட்டதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. சார்ஜர் இன்றி நெக்சான் EV காரை காட்சிப்படுத்துவதை தவிர வேறு எதற்கும் பயன்படுத்த முடியாது.