ஆட்டோ டிப்ஸ்

வாகன விற்பனையில் 40 சதவீத வளர்ச்சி - அசத்தும் கியா இந்தியா!

Published On 2023-01-03 11:38 GMT   |   Update On 2023-01-03 11:38 GMT
  • கியா இந்தியா நிறுவனத்தின் வாகன விற்பனை விவரங்கள் வெளியாகி உள்ளது.
  • வாகன விற்பனையில் வருடாந்திர அடிப்படையில் கியா இந்தியா 47.7 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது.

கியா இந்தியா நிறுவனம் இந்திய சந்தையில் வேகமாக வளர்ந்து வருகிறது. சமீபத்தில் 2022 ஆண்டு விற்பனையில் 3 லட்சத்து 36 ஆயிரத்து 619 யூனிட்களை பதிவு செய்தது. 2021 ஆண்டுடன் ஒப்பிடும் போது கடந்த ஆண்டு விற்பனை 47.7 சதவீதம் அதிகரித்து இருக்கிறது.

இவற்றில் உள்நாட்டு விற்பனை 2 லட்சத்து 54 ஆயிரத்து 556 யூனிட்கள் அடங்கும். இது முந்தைய விற்பனையை விட 40.1 சதவீதம் அதிகம் ஆகும். 2022 ஆண்டு மட்டும் கியா இந்தியா நிறுவனம் 82 ஆயிரத்து 063 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. இந்திய சந்தையில் 2019 ஆகஸ்ட் மாத வாக்கில் களமிறங்கிய கியா இந்தியா நிறுவனம் விற்பனையில் எட்டு லட்சம் யூனிட்களை கடந்து அசத்தி உள்ளது.

இதுதவிர டிசம்பர் 2022 மாதத்தில் மட்டும் கியா இந்தியா நிறுவனம் 15 ஆயிரத்து 184 யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது. இது வருடாந்திர அடிப்படையில் 94.7 சதவீதம் அதிகம் ஆகும். கடந்த ஆண்டு புது மைல்கல் எட்டியதோடு இந்தியாவில் முன்னணி யுவி ஏற்றுமதியாளர் எனும் பெருமையை கியா இந்தியா எட்டியது. 2022 ஆண்டில் மட்டும் கியா இந்தியா 82 ஆயிரத்து 063 யூனிட்களை ஏற்றுமதி செய்து இருக்கிறது.

உள்நாட்டில் செல்டோஸ் எஸ்யுவி மாடல் இந்திய சந்தையில் அதிகம் விற்பனையாகும் எஸ்யுவி-க்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த மாடல் ஒரே ஆண்டில் ஒரு லட்சம் யூனிட்கள் எனும் மைல்கல்லை எட்டியது. 2022 ஆண்டில் இந்த எஸ்யுவி மாடல் 1 லட்சத்து 01 ஆயிரத்து 569 யூனிட்கள் விற்பனையாகி இருந்தது. இதைத் தொடர்ந்து சொனெட் மாடல் இதே ஆண்டு 86 ஆயிரத்து 251 யூனிட்கள் விறபனையாகி இருந்தது.

கியா கரென்ஸ் மாடல் கடந்த ஆண்டு 62 ஆயிரத்து 756 யூனிட்கள் விற்பனையாகி இருந்தது. இது இந்திய சந்தையில் அதிகம் விற்பனையாகும் இரண்டாவது பெரிய எம்பிவி மாடல் எனும் பெருமையை பெற்று இருக்கிறது. இதைத் தொடர்ந்து கியா கார்னிவல் மற்றும் கியா EV6 எலெக்ட்ரிக் கார் மாடல்கள் முறையே 3 ஆயிரத்து 550 மற்றும் 430 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.

Tags:    

Similar News