மீன ராசி நேயர்களே!
தை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு வக்ரம் பெற்றுச் சஞ்சரிக்கிறார். மேலும் அர்த்தாஷ்டம குருவாகவும் இருக்கிறார். எனவே அடிக்கடி இடமாற்றம், ஆரோக்கியப் பாதிப்பும், அதிக விரயமும் ஏற்படலாம். பொதுவாக இதுபோன்ற நேரங்களில் வீண் விரயங்களில் இருந்து விடுபட வேண்டுமானால் சுப விரயங்களை மேற்கொள்வது நல்லது. வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் ஆடம்பரப் பொருட்களை வாங்குவதோ, கட்டிய வீட்டைப் பழுது பார்ப்பதிலோ கவனம் செலுத்தலாம். ஆன்மிகப் பயணங்கள் அதிகரிக்கும். ஆதாயத்தைக் காட்டிலும் விரயங்கள் கூடும்.
வக்ர குரு
மிதுன ராசியில் சஞ்சரிக்கும் குரு, இந்த மாதம் முழுவதும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உங்கள் ராசியைப் பொறுத்தவரை ராசிநாதனாகவும், தொழில் ஸ்தானாதிபதியாகவும் விளங்குபவர் குரு. அவரது வக்ர இயக்கம் நன்மைதான் என்றாலும், அர்த்தாஷ்டம குருவாக இருப்பதால் ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கலாம். குடும்பத்தில் பழைய பிரச்சனைகள் மீண்டும் தலைதூக்கும். தாயின் உடல்நலத்தில் கவனம் தேவை. இடம், பூமி வாங்குவதில் இருந்த பிரச்சனைகள் மேலும் நீடிக்கலாம். இடமாற்றம், வீடு மாற்றம் தானாகவே வந்து மனக்கலக்கத்தை உருவாக்கும்.
குருவின் பார்வை 8, 10, 12 ஆகிய இடங்களில் பதிவதால் இழப்புகளை ஈடுசெய்ய புதிய வாய்ப்புகள் வரலாம். தொழில் பங்குதாரர்களால் ஏற்பட்ட பிரச்சனை ஒரு வழியாகத் தீரும். ஆயினும் புதிய முயற்சிகளில் தடை வந்துகொண்டே இருக்கும். தன்னம்பிக்கையைத் தளரவிடாமல் பார்த்துக்கொள்வது நல்லது. நீண்டதூரப் பயணம் பலன்தரும் விதம் அமையும். சொந்த ஊரில் இருப்பவர்கள் வெளிநாடு செல்லவும், வெளிநாட்டில் இருப்பவர்கள் சொந்த ஊர் திரும்பவும் எடுத்த முயற்சிகள் பலன்தரும். வாகன மாற்றம், இடமாற்றம் ஏற்படலாம். இதுபோன்ற நேரங்களில் வியாழக்கிழமை தோறும் குருவிற்குரிய சிறப்பு ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு வருவதோடு, இல்லத்திலும் குருகவசம் பாடி குருபகவானை வணங்குவது நல்லது.
கும்ப - புதன்
உங்கள் ராசிக்கு 4, 7-க்கு அதிபதியானவர் புதன். அவர் 29.1.2026 அன்று விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கப்போகிறார். எனவே பெற்றோர் வழியிலும், களத்திர வழியிலும் செலவு ஏற்படலாம். இடம், பூமி வாங்கும் சுபச்செலவுகளும் உண்டு. பிள்ளைகளின் திருமணத்தைப் பேசி முடித்து அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு அஸ்திவாரம் அமைத்துக்கொடுப்பீர்கள். நரம்பு, எலும்பு சம்பந்தப்பட்ட வகையில் ஆரோக்கியத் தொல்லை ஏற்படலாம். உணவுப் பழக்க வழக்கத்தில் கட்டுப்பாடு தேவை. புதிய பொறுப்புகளை யோசித்து ஏற்றுக்கொள்வது நல்லது. வியாபாரத்தில் உள்ள நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொண்டு வாழ்க்கைக் பாதையை சீராக்கிக்கொள்வீர்கள்.
கும்ப - சுக்ரன்
மகரத்தில் சஞ்சரிக்கும் சுக்ரன், 7.2.2026 அன்று கும்ப ராசிக்குச் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் 12-ல் மறைவது யோகம்தான். 'கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்' என்பதற்கேற்ப பொருளாதார நிலையில் திடீர் முன்னேற்றமும், புது முயற்சியில் வெற்றியும் கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழியே வந்த பிரச்சனை அகலும். பயணங்களால் பலன் கிடைக்கும். பக்குவமாகப் பேசிக் காரியங்களை சாதித்துக்கொள்வீர்கள். இக்காலத்தில் சுக்ர வழிபாடு சுகத்தை வழங்கும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு நல்ல திருப்பங்கள் ஏற்படும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு கூட்டு முயற்சி பலன்தரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கலைஞர்கள் புதிய இலக்கை நோக்கி பயணிப்பீர்கள். மாணவ- மாணவிகளுக்கு படிப்பில் தேர்ச்சி உண்டு. பெண்களுக்கு ஆரோக்கியத்தில் கவனம் தேவை. விரயத்தை சுபவிரயமாக மாற்றிக்கொள்வது நல்லது.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
ஜனவரி: 15, 20, 21, 26, 27, 30, 31, பிப்ரவரி: 10, 11, 12.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கிளிப்பச்சை.