மீனம் - தமிழ் மாத ஜோதிடம்

2025 சித்திரை மாத ராசிபலன்

Published On 2025-04-07 08:40 IST   |   Update On 2025-04-07 08:41:00 IST

நினைத்ததை உடனே முடிக்க நினைக்கும் மீன ராசி நேயர்களே!

விசுவாவசு வருட புத்தாண்டின் சித்திரை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குருவானவர், சுக்ரன் வீட்டில் பரிவர்த்தனை யோகம் பெற்று சஞ்சரிக்கிறார். இதன் விளைவாக இல்லத்தில் நல்ல காரியங்கள் நடைபெறும். உடன்பிறப்புகளின் வழியே உருவான பகை மாறும். வழக்குகள் சாதகமாக முடியும்.

நட்பால் நன்மை கிடைக்கும். நாகரிகமாக வாழ, தேவையான வசதிகள் வந்து சேரும். பல முறை போராடியும் முடிவடையாத சில காரியங்கள் இப்பொழுது முடிவுக்கு வரும். இடம், பூமி சம்பந்தப்பட்ட வகையில் பத்திரப் பதிவில் இருந்த தடை அகலும். உடல்நலத்தில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.

குரு - சுக்ர பரிவர்த்தனை

சித்திரை 1-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை, குரு - சுக்ர பரிவர்த்தனை இருக்கிறது. உங்கள் ராசிநாதனாக மட்டுமின்றி, தொழில் ஸ்தானத்தின் அதிபதியாகவும் விளங்குபவர் குரு. அவர் அஷ்டமாதிபதி சுக்ரனோடு பரிவர்த்தனை பெறுவதால் சில நேரங்களில் இழப்புகளையும், ஏமாற்றங்களையும் சந்திக்க நேரிடும். கொடுக்கல்- வாங்கல்களில் தகராறுகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

பிறரை நம்பி ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகள், நடைபெறாமல் மீண்டும் உங்களை வந்துசேரலாம். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாவதில் நிறைய பிரச்சினைகள் ஏற்படும். புதிய வழக்குகள் உண்டாகி மன வருத்தத்தை அதிகரிக்கச் செய்யும்.

கும்ப - ராகு, சிம்ம - கேது

சித்திரை 13-ந் தேதி கும்ப ராசியில் ராகுவும், சிம்ம ராசியில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். உங்கள் ராசிக்கு 12-ம் இடத்திற்கு வரும் ராகுவால் பயணங்கள் அதிகரிக்கும். இடமாற்றம், வீடு மாற்றம் உறுதியாகும். வாடகை கட்டிடத்தில் நடைபெறும் தொழிலை, சொந்தக் கட்டிடத்திற்கு மாற்றும் முயற்சி கைகூடும். 6-ல் சஞ்சரிக்கும் கேதுவால் உத்தியோகத்தில் திடீர் மாற்றம் வரலாம்.

விருப்ப ஓய்வில் வெளிவந்து சுய தொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். ஆரோக்கியக் குறைபாடு அதிகரிக்கும். எனவே அலைச்சலைக் குறைத்துக் கொள்வதோடு, ஆகாரத்திலும் கட்டுப்பாடு செலுத்துவது நல்லது.

மேஷ - புதன் சஞ்சாரம்

சித்திரை 17-ந் தேதி, மேஷ ராசிக்கு புதன் செல்கிறார். அங்குள்ள சூரியனோடு இணைந்து 'புத ஆதித்ய யோக'த்தை உருவாக்குகிறார். இதன் விளைவாக உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு. மேலதிகாரிகள் அதில் உள்ள நுணுக்கங்களை கற்றுக்கொடுப்பார்கள்.

காது குத்துவிழா, கல்யாணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் இல்லத்தில் நடைபெற வழிபிறக்கும். அரசு வேலைக்கு முயற்சித்தவர்களுக்கு அது கைகூடும். கடல்தாண்டி சென்று பணிபுரிய வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு சலுகை கூடும். விருப்பங்கள் நிறைவேறும்.

மிதுன - குரு சஞ்சாரம்

சித்திரை 28-ந் தேதி மிதுன ராசிக்கு குரு செல்கிறார். இந்தப் குருப்பெயர்ச்சியின் விளைவாக தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். கிளை தொழில்கள் செய்யும் வாய்ப்பு உண்டு. 'வெளிநாட்டில் உள்ள நல்ல நிறுவனங்களில் பணிபுரிய அழைப்புகள் வருமா?' என்று காத்திருந்தவர்களுக்கு, இப்பொழுது நல்ல தகவல் கிடைக்கும். பெற்றோரின் ஆதரவோடு சில பிரச்சினைகளில் இருந்து விடுபடுவீர்கள். கற்ற கல்விக்கேற்ற வேலை கிடைக்கும். வர வேண்டிய பாக்கிகள் வசூலாகும். தடைப்பட்ட காரியங்கள் ஒவ்வொன்றும் தானாக நடைபெறும்.

பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு செல்வாக்கு உயரும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த இலாகா மாற்றம் உண்டு. கலைஞர்களுக்கு பாராட்டு கிடைக்கும். மாணவ-மாணவிகளுக்கு எதிர்பார்த்த சலுகை உண்டு. பெண்களுக்கு தாய்வழி ஆதரவு திருப்தி தரும். குடும்ப முன்னேற்றம் கூடும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

ஏப்ரல்: 15, 16, 22, 23, 27, 28, மே: 2, 3, 13, 14.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்.

Similar News