மீனம் - தமிழ் மாத ஜோதிடம்

2025 புரட்டாசி மாத ராசிபலன்

Published On 2025-09-17 08:03 IST   |   Update On 2025-09-17 08:04:00 IST

மீன ராசி நேயர்களே!

புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு 4-ம் இடத்தில் சஞ்சரித்து அர்த்தாஷ்டம குருவாக இருக்கிறார். ஏழரைச் சனியில் விரயச் சனியின் ஆதிக்கம் நடைபெறுகின்றது. அஷ்டமத்தில் செவ்வாயும் இருக்கிறார். எனவே இக்கட்டான சூழ்நிலையும், எதிர்பார்ப்புகள் நிறைவேறாமல் இதயத்தை வாடவைக்கும் அமைப்பும் உண்டு. ஆயினும் மாதக் கடைசியில் குருபகவானால் மகிழ்ச்சியும், எண்ணங்கள் ஈடேறும் வாய்ப்பும் உண்டு. தொழில் மற்றும் உத்தியோகத்தில் நிலைமை சீராகி நினைத்தது நிறைவேறும்.

துலாம் - புதன்

புரட்டாசி 13-ந் தேதி, துலாம் ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் அஷ்டமத்தில் சஞ்சரிக்கும் பொழுது மிகுந்த நற்பலன் கிடைக்கும். மறைந்த புதன் நிறைந்த தன லாபத்தைக் கொடுப்பார். எனவே தொழில் முன்னேற்றம் உண்டு. உத்தியோகத்தில் சம்பள உயர்வும் கிடைக்கும். ஒருசிலருக்கு வெளிநாட்டு அழைப்பு வந்து மனதை மகிழ்விக்கும். முன்பு குறைந்த விலைக்கு வாங்கிப் போட்ட இடம், இப்பொழுது அதிக விலைக்கு விற்று அதன் மூலம் லாபம் கிடைக்கும். தாயின் உடல்நலம் சீராகும். திரும்பிச் சென்ற வரன்கள் மீண்டும் வரலாம். கல்யாண முயற்சிகள் கைகூடும்.

கடக - குரு

புரட்டாசி 22-ந் தேதி, கடக ராசிக்கு குரு அதிசாரமாக செல்கிறார். அங்கு செல்லும் அவர் உச்சமும் பெறுகிறார். அவர் உங்கள் ராசிநாதன் மட்டுமல்ல. தொழில் ஸ்தானத்திற்கும் அதிபதியாவார். எனவே அவர் உச்சம்பெறும் இந்த நேரம் அற்புதமான நேரமாகும். எதில் ஈடுபட்டாலும் அதில் வெற்றி கிடைக்கும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வழக்குகள் சாதகமாக முடியும். வருமானம் உயர நண்பர்கள் வழிகாட்டுவர்.

குருவின் பார்வை பலத்தால் உங்கள் ராசி புனிதமடைவதால், ஏழரைச் சனியால் ஏற்படும் சிரமங்கள் குறையும். சிந்தனைகளில் வெற்றி பிறக்கும். உத்தியோகத்தில் உயர்பதவிகள் கிடைத்து மகிழ்ச்சி காண்பீர்கள். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு அதிகார அந்தஸ்து கிடைக்கும். 'கல்யாணம் போன்ற சுபகாரியங்கள் நடைபெறாமல் தாமதப்படுகின்றதே' என்று கவலைப்பட்டவர்களுக்கு, இப்பொழுது நல்ல தகவல் வந்துசேரும். மங்கல ஓசை மனையில் கேட்கும். ஒட்டு மொத்தத்தில் தொட்ட காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைக்கும் நேரம் இது.

சனி வக்ரம்

கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி, இந்த மாதம் முழுவதும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். இந்த வக்ரம் நன்மையும், தீமையும் கலந்தே நடைபெறும். உங்கள் ராசிக்கு சனி பகவான் லாபாதிபதியாகவும், விரயாதிபதியாகவும் இருப்பதால் சிந்தித்து செயல்படுவது நல்லது. குடும்பச் சுமை கூடும். கொடுக்கல் - வாங்கல்களில் ஏமாற்றத்தைச் சந்திக்க நேரிடும். பயணங்கள் ஆதாயம் தருவதாக அமையாது. பல பணிகள் பாதியிலேயே நிற்கலாம். வெளிநாடு செல்லும் முயற்சிகளில் தாமதம் ஏற்படும். சனி பகவான் வழிபாடு நன்மை பயக்கும்.

பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மாதத்தின் பிற்பகுதியில் மகிழ்ச்சியான தகவல் வந்து சேரும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு லாபமும், விரயமும் சமமாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இடமாற்றம் உறுதிப்படும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். மாணவ - மாணவிகளுக்கு தேர்வில் வெற்றி கிடைக்கும். பெண்களுக்கு குடும்பச் சுமை அதிகரிக்கும். எவ்வளவு வருமானம் வந்தாலும் சேமிக்க இயலாது.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- செப்டம்பர்: 17, 26, 27, 28, அக்டோபர்: 3, 4, 13, 14.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்

Similar News