மீனம் - தமிழ் மாத ஜோதிடம்

2025 ஐப்பசி மாத ராசிபலன்

Published On 2025-10-16 07:42 IST   |   Update On 2025-10-16 07:43:00 IST

மீன ராசி நேயர்களே!

ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அவரது பார்வை உங்கள் ராசியில் பதிவதால் மகிழ்ச்சி அதிகரிக்கும். மனநிறைவான வாழ்க்கை அமையும். 6-க்கு அதிபதி நீச்சம் பெறுவது யோகம். எனவே கடன்சுமை குறையும். கவலைகள் தீரும். இடமாற்றம், ஊர் மாற்றம் இனிமை தரும் விதம் நடைபெறும். உத்தியோகத்தில் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைத்து மகிழ்வீர்கள். நல்ல சந்தர்ப்பங்கள் நாடிவரும் மாதம் இது.

உச்சம் பெற்ற குரு

மாதத் தொடக்கத்தில் குரு பகவான் கடக ராசியில் உச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். உங்கள் ராசிநாதன் உச்சம் பெறும் இந்த நேரம் அற்புதமான நேரமாகும். அவரது பார்வை பரிபூரணமாக உங்கள் ராசியில் பதியும் இந்த நேரம் தொட்டது துலங்கும். தொழிலில் கணிசமான தொகை கைகளில் புரளும். இனிய சந்தர்ப்பங்கள் இல்லம் தேடி வந்து கொண்டேயிருக்கும். வீடு வாங்கும் யோகம் உண்டு. வாங்கிப் போட்ட சொத்துக்களால் ஆதாயம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றுக் கொண்டு வெளியில் வந்து, சுய தொழில் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இப்பொழுது அது கைகூடும். பாதியில் நின்ற பணிகள் யாவும் முடிவடையும்.

சனி - ராகு சேர்க்கை

மாதம் முழுவதும் விரய ஸ்தானத்தில் சனியும், ராகுவும் இணைந்து சஞ்சரிக்கிறார்கள். விரய ஸ்தானத்தில் விரயாதிபதி சனி வக்ரம் பெறுவதால் எதிர்பாராத விரயங்கள் ஏராளமாக வந்துசேரும். 'பணம் வந்த மறுநிமிடமே செலவாகின்றதே' என்று கவலைப்படுவீர்கள். அலைச்சல் அதிகரிக்கும். ஆதாயம் குறைவாகவே கிடைக்கும். குடும்ப பிரச்சனைகள் கொஞ்சம் அதிகரிக்கலாம். கொள்கைப் பிடிப்பைக் கொஞ்சம் தளர்த்திக் கொள்ள நேரிடும். படிப்பிற்கேற்ற வேலை கிடைக்காமல் வேறு திருப்தியற்ற வேலை கிடைக்கும். வாகனப் பழுதுச் செலவு உண்டு. பிறருக்குப் பொறுப்பு சொல்வதால் பிரச்சனை ஏற்படும்.

விருச்சிக - செவ்வாய்

ஐப்பசி 10-ந் தேதி விருச்சிக ராசியில் செவ்வாய் வருகிறார். உங்கள் ராசிக்கு இதுவரை அஷ்டமத்தில் சஞ்சரித்து வந்த செவ்வாய், இப்பொழுது பாக்கிய ஸ்தானத்திற்கு வருவதால் எல்லாவிதமான நன்மைகளும் கிடைக்கும். குறிப்பாக பெற்றோர் வழியில் ஆதரவு கிடைக்கும். பேச்சாற்றல் மிக்க ஒருவர் உங்களுக்குப் பின்னணியாக இருந்து பல நல்ல காரியங்களை முடித்துக் கொடுப்பார். விலகிச் சென்ற உடன்பிறப்புகள் விரும்பி வந்திணைவர். வாங்கிய கடனைக் கொடுத்து மகிழ்வீர்கள். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். வெளிநாடு அல்லது வெளிமாநிலம் செல்லும் முயற்சி கைகூடும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும்.

துலாம் - சுக்ரன்

ஐப்பசி 17-ந் தேதி துலாம் ராசிக்கு சுக்ரன் செல்கிறார். அப்பொழுது 'புத சுக்ர யோக'மும், 'புத ஆதித்ய யோக'மும் ஏற்படுகிறது. இருப்பினும் உங்கள் ராசிநாதன் குருவிற்கு சுக்ரன் பகைக்கிரகம் ஆவார். அவர் அஷ்டமத்தில் அடியெடுத்து வைக்கும் இந்த நேரம் மிக மிக கவனமாக இருக்க வேண்டும். நினைத்தது ஒன்றும், நடந்தது ஒன்றுமாக இருக்கும். ஜீரணத் தொல்லைகளும், திடீர், திடீரென உடல்நிலையில் பாதிப்புகளும் ஏற்படலாம். பிறருக்கு பொறுப்பு சொல்லி வாங்கிக் கொடுத்தால், அதனால் பிரச்சனைகள் உருவாகும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்குத் தள்ளிப்போன விஷயங்கள் தானாக நடைபெறும். வியாபாரம், தொழில் செய்பவர்கள், எதிர்பார்த்த இலக்கை அடைவர். உத்தியோகத்தில் உள்ளவர்கள் உயர் பதவி பெறுவர். கலைஞர்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மாணவ - மாணவிகளுக்குப் படிப்பில் வெற்றி உண்டு. பெண்களுக்கு பணத்தேவை உடனுக்குடன் பூர்த்தியாகும். நல்ல காரியம் இல்லத்தில் நடைபெறும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

அக்டோபர்: 24, 25, 28, 30, 31, நவம்பர்: 5, 6, 9, 10.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பொன்னிற மஞ்சள்.

Similar News