சோதனைகளை சாதனைகளாக மாற்றும் மகர ராசியினரே
பொதுவாக ராசியையோ ராசி அதிபதியையோ எந்த கிரகமும் தொடர்பு கொள்ளாமல் இருப்பது மிக நல்லது.இந்த வகையில் பங்குனி மாதம் முழுவதும் ராசிக்கு எந்த கிரகத்தின் பார்வையும் இல்லை. இது மகர ராசிக்கு திறமையை மெருகேற்றி கொடுக்கும் அமைப்பாகும்.கோட்ச்சார சந்திரன் மட்டும் ராசியை கடப்பார் அல்லது பார்ப்பார். நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும்.கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். உரிய நேரத்தில் சாப்பிட முடியாமல் அதிகமாக உழைக்க நேரும்.விருந்து உபசாரங்கள், கேளிக்கைகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.
அசையும், அசையா சொத்து வாங்குவது, விற்பது பராமரிப்பது போன்ற காரியங்களில் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும். அலைச்சல் மிகுந்த பயணங்கள், பொருளாதாரத்தில் ஏற்றத் தாழ்வு சிறிய தடை தாமதங்கள் இருந்தாலும் வெற்றி நிச்சயம். பிள்ளைகளின் முன்னேற்றம் மகிழ்ச்சியை அதிகரிக்கும். உடல் உபாதைகள் இருந்தால் உரிய சிகிச்சையை பெற வேண்டும்.மகன், மகளுக்கு எதிர்பார்த்திருந்த வேலை கிடைக்கும். பெண்களுக்கு அழகு, ஆடம்பர பொருட்கள், தங்க நகைகள் கிடைக்கும். நண்பர்களால் ஆதாயம் உண்டு.வாடிக்கையாளர்கள் ஆதரவு கரம் நீட்டுவார்கள்.தடைபட்ட சகோதர சகோதரிகளின் திருமண முயற்சி வெற்றியாகும்.
பிறவிக் கடன் மற்றும் பொருள் கடன் தீர்க்க முயற்சிப்பீர்கள்.நீண்ட காலமாக குழந்தை இல்லாதவர்கள் செயற்கை கருத்தரிப்பு முறையை அணுகலாம். பிள்ளைகளுக்கு திருமணம் செய்தல் பேரன் பேத்தி எடுத்து அடுத்த தலைமுறையை உருவாக்குதல் போன்ற சுப பலன்கள் நடக்கும். நண்பர்கள் மூலமாக வீண் அலைச்சலும் காரியத்தடையும் உண்டாகும். தொழில் லாபமும் ஏற்றமும் உறுதி. கையிருப்பில் இருக்கும் சரக்குகளின் மதிப்பு உயரும். திருமணத் தடை அகலும். தடைபட்ட சுப காரியங்கள் சிறப்பாக நிறைவேறும். பலருக்கு சடங்கு சம்பிரதாயங்களை கடைபிடிக்காத காதல் கலப்பு திருமணமாகவே இருக்கும். காதல் திருமணத்திற்கு பெற்றோர்களின் சம்மதம் கிடைக்கும்.
இதனால் குடும்ப உறுப்பினர்களிடையே சிறு சலசலப்பு மன சஞ்சலம் இருந்து கொண்டே இருக்கும். இது போன்ற காரணங்களால் தந்தை மகன் உறவிலும் விரிசல் ஏற்பட்டு குடும்பம் பிரியும். தம்பதிகளின் உறவில் அந்நோன்யம் நீடிக்கும். அனைத்து விதமான நல்ல முயற்சிகளும் பலிதமாகும். அதிர்ஷ்டம் சார்ந்த விஷயங்கள் பல மடங்கு ஆதாயம் தரும். உயில் எழுதுவதை சிறிது காலத்திற்கு தள்ளிப் போடவும். சொத்துக்களின் விற்பனை சாதகமாகும்.பிள்ளைகளின் சுப நிகழ்விற்கான பேச்சு வார்த்தை நடக்கும்.மனதிற்குப் பிடித்ததை பிடித்தபடி செய்வீர்கள். அதனால் சில செலவுகளும் வரும்.கூட்டுத் தொழில் புரிபவர்கள் பொறுமை, நிதானத்துடன் இருக்க வேண்டும். தாய், தந்தையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம்.மாணவர்கள் நல்ல நண்பர்களுடம் நட்பு வைக்க வேண்டும். கூடா நட்பு கேடில் முடிந்து கெட்ட பெயர் எடுத்து தரும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும்.
குருமங்கள யோகம்
மகர ராசிக்கு 3 ,12 ஆம் அதிபதியான குரு பகவானை 4,11ம் அதிபதியான செவ்வாய் தனது நான்காம் பார்வையினால் பார்ப்பது குருமங்கள யோகமாகும்.சிலருக்கு அரசின் தொகுப்பு வீடு கிடைக்கும். சொத்து வாங்குதல் விற்றல் போன்றவற்றின் மூலம் அபரிமிதமான லாபம் கிடைக்கும் ரியல் எஸ்டேட்,கட்டுமான துறையில் பணிபுரிபவர்களின் வாழ்வாதாரம் உயரும்.புதிய வாகனம் வாங்குதல் அல்லது நிலத்தில் முதலீடு செய்தல் போன்ற அமைப்பு உருவாகும். சிலருக்கு புதிய நகைகள், ஆபரணங்கள் வாங்கும் யோகம் ஏற்படும்.வெளிநாட்டு வேலைக்கான முயற்சி சித்திக்கும்.சிலருக்கு தொழிலில் சகோதரருடன் பிரிவினை ஏற்படும். சிலருக்கு இளைய சகோதரரின் குடும்பத்தை பராமரிக்கும் நிலை ஏற்படும். பாகப்பிரிவினை நடக்கலாம். காணாமல் போன கை மறதியாக வைத்த ஆவணங்கள் கிடைக்கும். ஆன்லைனில் பொருள் வாங்கும் மோகம் அதிகமாகும்.தேவையற்ற சிந்தனைகளை தவிர்த்து யோகா, மெடிடேசன் , உடற்பயிற்சி, தியானம் போன்ற விஷயங்களில் மனதை செலுத்த வேண்டும்.
பொருளாதாரம்
தேவைக்கு மிகுதியாகவே வருமானம் கிடைக்கும்.கடனைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. ஏதாவது ஒரு வழியில் ரொட்டேஷன் செய்து தங்களை காப்பாற்றிக் கொள்வார்கள்.வரவும் செலவும் சமமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.கால்நடை வளர்ப்பில் ஆர்வம் மிகும். சொந்த வீட்டில் இருப்பவர்களுக்கு வீட்டை விரிவுபடுத்தவும் பராமரிப்பு செலவு மிகும். ஒரு சிலர் வசதி அதிகமான நல்லவாடகை வீட்டிற்கு செல்ல நேரும்.விவசாயிகளுக்கு கால் நடைகள் மூலமாகவும் அதிக விளைச்சலாலும் வருமானம் அதிகரிக்கும் காலம்.சிலருக்கு வீடு வாகன பராமரிப்பு செலவு அதிகரிக்கும்.
உத்தியோகஸ்தர்கள்
சிலருக்கு வெளியூர் அல்லது வெளி மாநிலம் சென்று வேலை பார்க்கும் அமைப்பு ஏற்படும்.அடிமைத் தொழிலில் இருப்பவர்களுக்கு சொந்தத் தொழில் செய்யும் சூழல் உருவாகும்.திறமைக்குத் தகுந்த அங்கீகாரம் கிடைக்கும்.எதையும் கற்றுக் கொள்ளும் ஆர்வம் அதிகமாகும். தேவையில்லாத சிந்தனையில் மனதை சிதற விடக் கூடாது.எல்லாம் எனக்கு தெரியும் என்று நினைத்து செயல்பட்டு எதிர்காலத்தை பற்றி கவலைப்படாமல் இருந்த நீங்கள் உலக மாற்றத்தை கண்டு புதிய வழிகளை தேடி சிந்திப்பீர்கள். இள வயது மகர ராசி வாலிபர்கள் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி பெற்றோர், உற்றார் உறவினரிடம் கெட்ட பெயர் எடுப்பீர்கள். சிறிய செயலுக்கு அதிக முயற்சியும் உழைப்பும் தேவைப்படும்.
கவனம் தேவை
செவ்வாய் சனி சேர்க்கை ராசிக்கு மூன்றாம் இடமான வெற்றி ஸ்தானத்தில் உள்ள ராசி அதிபதி சனிபகவானுடன் 4,11ம் அதிபதியான செவ்வாய் பங்குனி 19 (2.4.2026) அன்று இணைகிறார்.முகத்தில் கவலை, துக்கம் நிறைந்து இருக்கும். தோற்றப் பொலிவு குறையும். முடி நரைக்கும்.முகத்தில் கரும்புள்ளிகள் தழும்புகள் தோன்றும்.மனம் அலை பாய்ந்து கொண்டே இருக்கும். ஞாபக மறதி மிகும். எனக்கு உதவி செய்ய யாருமில்லை என்ற வார்த்தையை அடிக்கடி உபயோகிப்பீர்கள். அதிர்ஷ்டம் என்னை தேடி வருமா? என அதிர்ஷ்டத்தை தேடி காலம் தள்ளுவீர்கள். உங்களுக்கு சம்பந்தம் இல்லாத முன்னோர் சொத்துக்காக இருக்கும் பொன், பொருளையும் ஏமாந்து பிறருக்கு கொடுத்து பின்னர் அதற்காக வருந்துவீர்கள்.உடல் சோர்வு, கை, கால், மூட்டு வலி மிகுதியாகும்.ஜனன கால ஜாதகத்தில் உங்களின் தசா புத்தி சாதகமாக இருந்தால் எந்த பாதிப்பும் இருக்காது.தவறான சிந்தனையில் மனதை அலை பாய விடாமல் இருந்தால் மட்டுமே கவுரவத்தை கட்டிக் காக்க முடியும். வாழ்க்கை என்பது கண்ணாடி பாத்திரம் அதை கவனமாக கையாள வேண்டும்.
பரிகாரம் பங்குனி உத்திர நாளில் விரதம் இருந்து சிவ வழிபாடு செய்வது நல்லது.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406