மகர ராசி நேயர்களே!
ஆவணி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி தன ஸ்தானத்தில் வக்ரம் பெற்று சஞ் சரிக்கிறார். அவரோடு கூட ராகுவும் இணைந்திருக்கிறார். ராகுவைப் போல கொடுப்பானுமில்லை என்பார்கள். அந்த அடிப்படையில் வருமானம் திருப்திகரமாக இருந்தாலும் ராசிநாதன் வக்ர இயக்கத்தில் இருப்பதால் செலவுகள் நிறைய ஏற்படும். சுபச் செலவுகளாக செய்வது நல்லது. இடர்பாடுகளுக்கு நடுவில் முன்னேற்றம் ஏற்படும். என்றாலும் வருமானப் பற்றாக்குறை ஏற்படாது. இதுபோன்ற வக்ர காலங்களில் இல்லத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வாங்குவது நல்லது.
கடக - சுக்ரன்
ஆவணி 5-ந் தேதி, கடக ராசிக்கு சுக்ரன் வருகிறார். உங்கள் ராசிக்கு 5, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி சப்தம ஸ்தானத்திற்கு வரும்போது, புனிதப் பயணங்கள் அதிகரிக்கும். புகழ் கூடும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த தொல்லைகள் அகலும். ஒரு கடனை அடைக்க மற்றொரு கடன் வாங்கி வந்த உங்களுக்கு, தொடர்ந்து வருமானம் வந்து கொண்டேயிருக்கும். நல்ல சந்தர்ப்பங்களை நழுவவிட வேண்டாம். தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் விருப்ப ஓய்வில் வெளிவந்து, சுய தொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளின் முன்னேற்றம் திருப்திகரமாக இருக்கும்.
சிம்ம - புதன்
ஆவணி 9-ந் தேதி, சிம்ம ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 6, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். 6-க்கு அதிபதி 8-ல் வருவது நல்ல நேரம்தான். 'கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்' என்பதற்கேற்ப, மறைந்த புதனால் நிறைந்த தன லாபம் கிடைக்கும். மாமன், மைத்துனர் வழியில் ஏற்பட்ட மனக்கசப்புகள் மாறும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும். ஒரு சிலருக்கு இடமாற்றம், ஊர்மாற்றம் அமையலாம். வெளிநாடு சென்று பணிபுரியவேண்டும் என்று விரும்பு பவர்களுக்கு, அதில் கொஞ்சம் தாமதம் ஏற்படும். விலகிச் சென்ற உடன்பிறப்புகள் விரும்பி வந்திணைவர். பொதுவாழ்வில் மக்கள் செல்வாக்கு அதிகரிக்கும். இதுவரை எதிர்பார்த்த பொறுப்புகள் இப்பொழுது கிடைக்கும்.
துலாம் - செவ்வாய்
ஆவணி 29-ந் தேதி, துலாம் ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதி பதியானவர் செவ்வாய். அவர் தொழில் ஸ்தானத்திற்கு வருவதால் தொழில் வளம் சிறப்பாக இருக்கும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உயரும். எதிர்காலத்தை பற்றிய பயம் அகலும். வியாபாரம் வெற்றி நடைபோடும். உத்தியோகத்தில் உயர்அதிகாரிகள் உங்களுக்கு ஆதரவு தருவர். வளர்ச்சி அதிகரிக்கும் நேரம் இது. இடம் வாங்குவது, பூமி வாங்குவது போன்றவற்றில் ஆர்வம் காட்டுவீர்கள். கட்டிடம் கட்டும் பணி தொடரும்.
சிம்ம - சுக்ரன்
ஆவணி 30-ந் தேதி, சிம்ம ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 5, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் அஷ்டமத்திற்கு வரும் இந்த நேரத்தில், கொஞ்சம் கவனமாகச் செயல்பட வேண்டும். விரயங்கள் கொஞ்சம் கூடுதலாக இருக்கும். அன்பு நண்பர்களின் ஆதரவு குறையும். தொழிலில் யாரையும் நம்பிச் செயல்பட இயலாது. தொழில் போட்டிகள் அதிகரிக்கும். ஆரோக்கியத்திலும் கவனம் தேவை. பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகளுக்கு மத்தியில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்குத் தலைமையின் ஆதரவு உண்டு. கலைஞர்களுக்கு சந்தர்ப்பங்கள் சாதகமாக அமையும். பெண்களுக்கு குடும்ப முன்னேற்றம் கூடும். பணவரவு திருப்தி தரும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் கவனம் கூடும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
ஆகஸ்டு: 17, 18, 20, 25, 26, 30, 31, செப்டம்பர்: 1, 7, 8, 11, 12.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- வைலட்.