மகரம் - தமிழ் மாத ஜோதிடம்

2025 ஆடி மாத ராசிபலன்

Published On 2025-07-17 07:44 IST   |   Update On 2025-07-17 07:45:00 IST

மகர ராசி நேயர்களே!

ஆடி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி வக்ரம் பெற்று சஞ்சரிக்கிறார். அவர் மீது செவ்வாயின் பார்வை பதிகிறது. இது அவ்வளவு நல்லதல்ல. உடல் நிலையிலும், மன நிலையிலும் தெளிவில்லாத சூழ்நிலை உருவாகும். உள்ளத்தில் நினைத்ததை உடனடியாகச் செய்ய இயலாது. இடர்பாடுகளுக்கு நடுவில் முன்னேற்றம் ஏற்படும். வருமானம் பற்றாக்குறை உண்டு. உறவினர்களுக்குள் பகை உருவாகும் நேரம் இது. கவனமாக செயல்படுங்கள். குலதெய்வ வழிபாடும், இஷ்ட தெய்வ வழிபாடும் நற்பலன்களை வழங்கும்.

மிதுன - சுக்ரன்

ஆடி 10-ந் தேதி, மிதுன ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 5, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் 6-ம் இடத்திற்கு வரும் பொழுது, உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். ஊர் மாற்றம், இடமாற்றம் உறுதியாகலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு, உயர் அதிகாரிகளின் ஆதரவு திருப்திகரமாக இருக்கும். வாங்கிய கடனை கொடுத்து மகிழ்வீர்கள். உடல் ஆரோக்கியம் சீராக, மாற்று மருத்துவம் கைகொடுக்கும். எதிரிகளின் பலம் மேலோங்கி இருக்கும் இந்த நேரத்தில், எதையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செய்வது நல்லது. பிறருக்கு வாங்கிக் கொடுத்த தொகையால் பிரச்சினைகள் வரலாம். வியாபாரம் மற்றும் தொழிலில் 'பழைய பங்குதாரர்களை விலக்கி விட்டு, புதியவர்களை சேர்த்துக்கொள்ளலாமா?' என்று சிந்திப்பீர்கள். இழுபறியாக இருந்த வழக்குகள் கொஞ்சம் தாமதப்படத்தான் செய்யும்.

கன்னி - செவ்வாய்

ஆடி 13-ந் தேதி, கன்னி ராசிக்கு செவ்வாய் செல்கிறார். எனவே உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் 9-ம் இடத்தில் சஞ்சரிப்பது நல்ல நேரம்தான். பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் பலம் பெறுவதால் நல்ல சந்தர்ப்பங்கள் இல்லம் தேடி வரும். இழுபறியான காரியங்கள் இனிதே முடியும். தொழிலில் ஏற்பட்ட மந்தநிலை மாறி சூடுபிடிக்கும். தாய்வழி ஆதரவு உண்டு. இடம், பூமி வாங்க வேண்டுமென்ற எண்ணம் நிறைவேறும். பயணங்கள் பலன் தருவதாக அமையும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் உங்களுக்கு வேண்டிய சலுகைகளை வழங்குவர். இருப்பினும் விருப்ப ஓய்வு பெற்றுக்கொண்டு வெளியில் வரும் சிந்தனை அதிகரிக்கும். கூட்டு முயற்சியில் இருந்து விலகி தனித்து இயங்க முற்படுவீர்கள்.

கடக - புதன்

ஆடி 18-ந் தேதி, கடக ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 6,9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் சப்தம ஸ்தானத்திற்கு வரும் போது, வெளிநாட்டில் இருந்து ஆதாயம் தரும் தகவல் வரலாம். உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த புது முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ஊர் மாற்றம் அல்லது வீடு மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். 'வாழ்க்கைக் துணைக்கு வேலை கிடைக்கவில்லையே' என்று கவலைப்பட்டவர்களுக்கு, இப்பொழுது வேலையும் கிடைத்து, உதிரி வருமானங்களும் பெருகும். தந்தை வழி உறவில் இருந்த விரிசல் அகலும். 'புத ஆதித்ய யோகம்' இருப்பதால் கல்விக்காக எடுத்த முயற்சி கைகூடும். பிள்ளைகளின் கல்வி சம்பந்தமாகவோ, அவர்கள் வெளிநாடு சென்று பணிபுரிவது தொடர்பாகவோ முயற்சி செய்தால் அதில் அனுகூலம் உண்டு.

பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு நினைத்தது நிறைவேறுவதில் தாமதம் ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகளை எதிர்கொள்ளும் சூழ்நிலை உண்டு. உத்தியோகஸ்தர்களுக்கு இடமாற்றம் உறுதியாகலாம். கலைஞர்களுக்கு அதிக முயற்சி செய்வதன் மூலம் பலன் கிடைக்கும். மாணவ - மாணவிகளுக்கு மறதி அதிகரிக்கும். பெண்களுக்கு குடும்ப பிரச்சினைகளை சமாளிக்க வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகும். வருமானப் பற்றாக்குறை உண்டு.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

ஜூலை: 18, 19, 29, 30, ஆகஸ்டு: 3, 4, 5, 11, 12.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ரோஸ்.

Similar News