உதவும் குணத்தால் உள்ளத்தில் இடம்பிடித்த மகர ராசி நேயர்களே!
பங்குனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி குடும்ப ஸ்தானத்தில் பலம் பெற்று சஞ்சரிக்கிறார். மேலும் ரிஷபத்தில் இருக்கும் குரு உங்கள் ராசியைப் பார்க்கிறார். 'குரு பார்க்க கோடி நன்மை' என்பதற்கேற்ப, இந்த மாதம் முழுவதும் உங்களுக்கு மகிழ்ச்சியான மாதமாகவே அமையப்போகிறது. தொட்டது துலங்கும்.
தொழில் வளர்ச்சிக்கு குறுக்கீடாக இருந்தவர்கள் விலகுவர். வெற்றிக்குரிய செய்தி வீடு வந்துசேரும். விரும்பும் விதத்தில் உத்தியோகத்தில் பணிமாற்றம் கிடைக்கும். நல்ல சந்தர்ப்பங்கள் நாடிவரும். சொத்துக்களாலும், சொந்தங்களாலும் நன்மை கிடைக்கும்.
மீன - புதன் சஞ்சாரம்
மாதத்தொடக்கத்தில் மீன ராசியில் புதன் நீச்சம் பெற்றும், வக்ரம் பெற்றும் சஞ்சரிக்கிறார். உங்கள் ராசிக்கு 6, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் நீச்சம் பெறுவது ஒரு வழிக்கு நன்மைதான். என்றாலும் பாக்கிய ஸ்தானத்திற்கும் அவர் அதிபதியாவதால், சில காரியங்கள் முடிவடைவதில் தடைகள் ஏற்படும். பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட பஞ்சாயத்துக்களில் தாமதங்கள் உருவாகும். வாகனப் பழுதுகளால் வாட்டம் உண்டு. வரவை விட செலவு அதிகரிக்கும். வழக்குகளும், வாய்தாக்களும் வந்து கொண்டே இருக்கும். தசா புத்திக்கு ஏற்ற தெய்வ வழிபாடுகளை மேற்கொள்வது மன அமைதிக்கும், வருமான உயர்வுக்கும் வழிவகுக்கும்.
கும்ப - புதன் சஞ்சாரம்
பங்குனி 4-ந் தேதி புதன், கும்ப ராசிக்கு வக்ர இயக்கத்தில் வருகிறார். உங்கள் ராசிக்கு 6-ம் இடத்திற்கு அதிபதியான புதன், தன ஸ்தானத்திற்கு வரும் பொழுது பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேரும் வாய்ப்பு உண்டு. உத்தியோக மாற்றத்தை விரும்புபவர்களுக்கு உயர் பதவியுடன் கூடிய மாற்றங்கள் வரலாம். இதுவரை கொடுக்கல்- வாங்கலில் இருந்த பிரச்சினைகள் இப்போது முடிவுக்கு வரும். உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கும். குருவின் பார்வை கைகொடுப்பதால் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகளும், பதவிகளும் கிடைக்கும்.
மீன - சுக்ரன் வக்ரம்
மீனத்தில் உள்ள சுக்ரன் இந்த மாதம் முழுவதும் வக்ரம் பெற்று சஞ்சரிக்கிறார். உங்கள் ராசிக்கு 5, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் உச்சமும், வக்ரமும் பெறுவதால் பிள்ளைகளால் சில பிரச்சினைகள் வரலாம். பூர்வீக சொத்துக்களை பாகப்பிரிவினை செய்து கொள்வதில் அண்ணன், தம்பிகளுக்குள் கருத்து வேறுபாடுகள் வரலாம். தொழில் பங்குதாரர்களால் தொல்லை உண்டு. 'நினைத்தது நிறைவேறவில்லையே' என்று கவலைப்படுவீர்கள். ஒரு கடனை அடைக்க மற்றொரு கடன் வாங்கும் சூழல் உருவாகலாம். சங்கிலித் தொடர் போல கடன் சுமை வந்துசேரும்.
கடக - செவ்வாய்
பங்குனி 24-ந் தேதி கடக ராசிக்குச் செல்லும் செவ்வாய், அங்கு நீச்சம் பெறுகிறார். 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியான செவ்வாய் நீச்சம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. தாயின் உடல்நலத்தில் பிரச்சினைகள் உருவாகும். வாங்கிய சொத்துக்களால் வில்லங்கங்கள் ஏற்படும். தொழில் பங்குதாரர்கள் விலகிக்கொள்வதாக சொல்லி அச்சுறுத்துவர். வெளிநாட்டு முயற்சியில் தாமதம் ஏற்படும். கடன் சுமையின் காரணமாக கட்டிய வீட்டை விலை பேசும் சூழல் உருவாகலாம். உத்தியோகத்தில் சகப் பணியாளர்களிடம் உங்கள் முன்னேற்றத்தை பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய உத்வேகத்துடன் செயல்படும் நிலை உருவாகும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்கள், கூட்டாளிகள் பாராட்டும் விதம் செயல்படுவர். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு உண்டு. உத்தியோகஸ்தர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். கலைஞர்களுக்கு மாதத்தின் மையப்பகுதியில் நல்ல தகவல் வந்துசேரும். மாணவ - மாணவிகள், அதிக மதிப்பெண் எடுப்பதிலேயே குறிக்கோளாக இருப்பர். பெண்களுக்கு பிரச்சினைகளில் இருந்து விடுபடும் சூழல் உண்டு.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
மார்ச்: 15, 16, 19, 20, 27, 28, 31, ஏப்ரல்: 1, 12, 13.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆனந்தா நீலம்.