மகரம் - தமிழ் மாத ஜோதிடம்

2025 சித்திரை மாத ராசிபலன்

Published On 2025-04-07 08:35 IST   |   Update On 2025-04-07 08:39:00 IST

சேவை செய்வதையே குறிக்கோளாகக் கொண்டு வாழும் மகர ராசி நேயர்களே!

விசுவாவசு வருட புத்தாண்டின் சித்திரை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி, குடும்ப ஸ்தானத்தில் பலம் பெற்று சஞ்சரிக்கிறார். பஞ்சம ஸ்தானத்தில் குரு - சுக்ர பரிவர்த்தனை நிகழ்கிறது.

அங்ஙனம் பரிவர்த்தனை பெற்ற குரு உங்கள் ராசியை பார்ப்பதால் தொட்டது துலங்கும். தொழில் முன்னேற்றம் ஏற்படும். பண நெருக்கடி அகலும். வளர்ச்சிக்கு குறுக்கீடாக இருந்தவர்கள் விலகுவர். உத்தியோகத்தில் ஊதிய உயர்வுடன் கூடிய இடமாற்றம் கிடைக்கும். சுபகாரிய பேச்சுக்கள் முடிவாகும்.

குரு - சுக்ர பரிவர்த்தனை

சித்திரை 1-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை குரு - சுக்ர பரிவர்த்தனை இருக்கிறது. உங்கள் ராசிக்கு 3, 12-க்கு அதிபதியானவர் குரு. சகாய ஸ்தானாதிபதி பரிவர்த்தனையாகும் இந்த நேரத்தில் தொட்டது துலங்கும். தொழில் முன்னேற்றம் ஏற்படும். வழக்குகள் சாதகமாகும்.

வருங்காலம் பற்றிய பயம் அகலும். உடன்பிறப்புகளின் வழியில் நடைபெறும் சுபகாரியத்தை முன் நின்று நடத்தி பெருமை அடைவீர்கள். புதிய ஒப்பந்தங்கள் அடுக்கடுக்காக வரலாம். குடும்பத்தில் நீண்ட நாட்களாக தலைதூக்கிய பிரச்சினை இப்பொழுது நல்ல முடிவுக்கு வரும்.

கும்ப - ராகு, சிம்ம - கேது

சித்திரை 13-ந் தேதி கும்ப ராசியில் ராகுவும், சிம்ம ராசியில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். தன ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதால் பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். கணிசமான லாபம் கைகளில் புரளும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். புனித பயணங்கள் அதிகரிக்கும். அஷ்டமத்தில் கேது வருவதால் அலைச்சல் கொஞ்சம் அதிகரிக்கும். அதிக பொறுப்புகளை மேலதிகாரிகள் உங்களிடம் ஒப்படைப்பார்கள். எதையும் உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது.

பயணங்களால் அலைச்சல் ஏற்படுமே தவிர, ஆதாயம் குறைவாகவே கிடைக்கும். வெளிநாடு சென்றவர்கள் சொந்த ஊர் திரும்ப முடியாமலும், சொந்த ஊரில் உள்ளவர்கள் வெளிநாடு செல்ல எடுத்த முயற்சிகளிலும் தடைகள் ஏற்படும். இக்காலத்தில் ராகு - கேதுகளுக்குரிய சிறப்பு வழிபாடுகளை யோக பலம் பெற்ற நாளில் செய்வது நல்லது.

மேஷ - புதன் சஞ்சாரம்

சித்திரை 17-ந் தேதி, மேஷ ராசிக்கு புதன் வருகிறார். அங்குள்ள சூரியனோடு இணைந்து 'புத ஆதித்ய யோக'த்தை உருவாக்குகிறார். உங்கள் ராசிக்கு 6, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் அஷ்டமாதிபதியோடு இணையும் இந்தநேரம் நல்ல நேரம்தான். 'விபரீத ராஜ யோக' அடிப்படையில் நல்ல சம்பவங்கள் ஏராளமாக நடைபெறும். நீங்கள் தேர்ந்தெடுத்த களம் எதுவாக இருந்தாலும் அதில் வெற்றி கிடைக்கும். அரசுவழி வேலைக்கு முயற்சித்தவர்களுக்கு அது கைகூடும்.

மிதுன - குரு சஞ்சாரம்

சித்திரை 28-ந் தேதி மிதுன ராசிக்கு குரு வருகிறார். அவரது பார்வை பதியும் இடங்கள் புனிதமடைகிறது. எனவே குடும்ப ஒற்றுமை பலப்படும். உடன்பிறந்தவர் களால் நன்மை உண்டு. அதிகாரப் பதவியை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு அது கைகூடும். கூட்டு குடும்பத்தில் ஏற்பட்ட பிளவு அகலும். பொதுவாழ்வில் இருப்பவர்கள் சாதனை படைக்கும் நேரம் இது. தொழில் சூடுபிடிக்கும். நல்ல சம்பவங்கள் நாளும் நடைபெறும். நாடு மாற்றம், வீடு மாற்றம் இனிமை தரும்.

பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு நட்பால் நன்மை உண்டு. தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு தொல்லை தந்தவர்கள் விலகுவர். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஊர் மாற்றம் தேடி வரும். கலைஞர் களுக்கு கவுரவம் உயரும். மாணவ - மாணவிகளுக்கு மதிப்பெண் உயர ஆசிரியர் வழிகாட்டுவர். பெண்களுக்கு பிரச்சினைகளில் இருந்து விடுபட்டு நிம்மதி கிடைக்கும். பொருளாதார நிலை திருப்திதரும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

ஏப்ரல்: 15, 17, 20, 22, மே: 8, 9, 13, 14.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆனந்தா நீலம்.

Similar News